முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 16:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5,200 பேர் முதல்வர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் க ம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. நெல்லை அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜகவை சேர்ந்த வெள்ளையம்மாள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றதால் புவனேஸ்வரி ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் அந்தோணி கிரேஸை ஆதரித்து அவர் நகரின் முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதீய ஜனதா இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். பின்னர் நேற்று அவர் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகருக்கு சென்னையில் இருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். துணை சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வேன் மூலமாக புறப்பட்டார். அப்போது வழிநெடுக பொதுமக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். பொதுக்கூட் ட மேடைக்கு செல்லும் வழியில் கட்சி கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. வழிநெடுக சண்டை மேளம் மற்றும் நாதஸ்வரம் முழங்க முதல்வருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர். சில இடங்களில் பொதுமக்கள் பால்குடம் ஏந்தியும் வரவேற்றனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இன மக்கள் தங்களது பாணியில் நடன மாடி முதல்வரை வரவேற்றனர். வழி எங்கும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முதல்வரை வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். முதல்வரும் பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறே சென்றார். பின்னர் கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழா மலரையும் அவர் வெளியிட அமைச்சர் வேலுமணி அதை பெற்று கொண்டார். பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதாவை அங்கு திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அவர்களை பார்த்து இரு விரல் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர். இந்த கூட்டத்தில் முதல்வருக்கு அமைச்சர் வேலுமணி வீரவாளை நினைவு பரிசாக வழங்கினார். முதல்வர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5,200 பேர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா பாஜக வேட்பாளர்கள் வாபஸ் பெறுவது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். அதாவது தோல்வி பயத்தால்தான் பாஜக வேட்பாளர்கள் வாபஸ் பெறுகிறார்கள். ஆனால் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள். எங்களை பொறுத்தவரை மக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் தயார் என்று குறிப்பிட்ட முதல்வர் பாஜக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்