முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை வளர்ப்புக்கு அரசு மானியத்துடன் கூடிய தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டம் அறிமுகம்

புதன்கிழமை, 24 மே 2017      வேளாண் பூமி
Image Unavailable

கால்நடை வளர்ப்புக்கு அரசு மானியத்துடன் கூடிய தீவனப் பயிர் அபிவிருத்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று  வெளியிட்ட செய்தி:கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 முதல் 70 விழுக்காடு, தீவன, பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய கீழ்கண்ட தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

450 ஏக்கர் நிலப்பரப்பில் இறவையில் வீரிய ரக கம்பு நேப்பியர் புல் சாகுபடி செய்தல் திட்டத்தில் பயனாளிகளுக்கு 0.25 ஏக்கருக்கு புல்கரணைகள் வாங்க 100 சதவீத மானியம் வழங்கப்படும். (பயனாளிக்கு அதிகபட்சம் 1 ஏக்கர்). 200 ஏக்கர் நிலப்பரப்பில் இறவையில் 29 ரக சோளம் சாகுபடி செய்யும் திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் 0.25 ஏக்கர் முதல் (2 கால்நடைகள்) அதிகபட்சமாக ஓர் ஏக்கர் முடிய (8 கால்நடைகள்) நிலப்பரப்புக்கு 100 சதவீத மானியத்தில் சோள விதைகள் வழங்கப்படும்.

75 சதவீத மானியம்

மானாவாரியில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனச் சோளம், தீவனத் தட்டைப்பயறு சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்குதல். (பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை).முன்னோடி விவசாயிகள் மூலம் தரச்சான்றுடன் கூடிய தீவனப் புல் விதை உற்பத்தி செய்தல் திட்த்தில் 30 ஏக்கரில் தீவன சோளமும், 20 ஏக்கரில் தட்டைப் பயிரும் சாகுபடி செய்து அதன் மூலமாக விதை உற்பத்தியாகும் விதையை அரசின் மூலம் சந்தை விலையைவிட கூடுதலாக சன்மானத்துடன் கொள்முதல் செய்யப்படும்.தற்போது நிலவி வரும் வறட்சியால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால், கால்நடை தீவன உற்பத்தி இழப்பைத் தடுக்கும் வகையில் குறைந்த அளவு தண்ணீரில் ஹைட்ரோபோனிக் (மண்ணில்லா தீவன உற்பத்தி முறை) முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய 10 அலகுகள் ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணங்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும்.பால் உற்பத்தி செலவைக் குறைக்கும் நோக்கத்தில் குறைந்த விலையில் நிறைந்த புரதம் கொண்ட அசோலா பாசி உற்பத்தி செய்ய 300 நபர்களுக்கு அசோலா தொட்டி, இடுபொருள்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.இத்திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

எல்லா இனங்களிலும் 30 சதவீத தாழ்த்தப்பட்ட, பழங்குடி பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். குறு விவசாயிகள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்