முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுயசிந்தனையுள்ளவர்கள் திறமைமிக்கவர்கள்! நியாயமற்ற குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாதீர்கள்!

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

நான் புத்திசாலி என்றோ, நானே புத்திசாலி என்றோ நிரூபிக்க துடிக்கும் ஏராளமானோர் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் தன்னுடைய புத்தி கூர்மையையும், திறமையையும் காட்டுவதற்காக மற்றவர்களைக் குறைவாகக் கூறுவதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.  அப்படி ஆணவம், தலைக்கனம் கொண்டவர்கள் நிறைந்த இந்த உலகில் நியாயமற்ற குற்றச்சாட்டுகளால் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தாக்கப்படுகிறான். எனவே அவற்றை பொருட்படுத்தாமல் மற்றவர்கள் உங்களைத் தாழ்வாக நடத்த அனுமதிக்காமல், உங்களை அதிகாரம் செய்து தங்களது சொந்த லாபங்களுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்ளவிடாதீர்கள்.   

அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ‘நான் சொன்னதைச்  செய்’ என்று கட்டளையிட்டு வற்புறுத்துகிறார்களா அல்லது நாம் செய்ய விரும்பாத செயலை செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களா அல்லது நம்மை மதிப்பதே இல்லை கண்டும் காணாதவர் போல் இருந்துவிடுகிறார்களா அல்லது நம் மனம் புண்படாதபடி நடந்துகொள்கிறார்களா அல்லது நாம் சொல்வதை ஆர்வத்துடன் செவிகொடுத்து கேட்கிறார்களா அல்லது நம்மோடு பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறார்களா என்று ஓவ்வொருவரும் இப்படித் தங்களைத் தாங்களே கேள்விகளை கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்களிலிருந்துதான் ஒருவன் பெருமைபடத்தக்க முறையில் வாழ்ந்து வருகிறானா, இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.  உங்களுக்குக் கிடைக்கும் மரியாதை, நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொருத்தே அமைகிறது.

எடுப்பார் கை பிள்ளையாக, முகதாட்சண்யம் கருதியோ, அல்லது மறுக்க மனோதைரியம் இல்லாமலோ அடுத்தவர் கோரிக்கை அனைத்திற்கும் நீங்கள் தலையாட்டும் பொம்மையாக நடந்து கொண்டால், மற்றவர்களுக்கு குற்றேவல் செய்யும் வேலைக்காரர்களாகத்தான் உருவெடுப்பீர்கள். உங்களுக்கு நீங்களே மதிப்பு கொடுக்காவிட்டால், மற்றவர் யாரும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். தன்னைக் குறைவாக மதிப்பிட்டுக் கொள்பவனை மற்றவர்களும் குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள்.

ஒருவன் தன்னைப் பற்றி பெருமையாகக் கொண்டிருக்கும் கருத்தை உலகம் எளிதில் ஏற்காது. ஆனால் ஒருவன் தன்னைப் பற்றி கொண்டிருக்கும் தாழ்வான கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டு விடும்.

அச்சத்தைத் தவிர்க்க வேண்டும்

‘பயம்’ என்று தனியாக எதுவும் இல்லை. இது ஒரு உணர்ச்சியே. பல சமயங்களில்,“அப்படி ஏதேனும் நடந்து விட்டால்…” என்று நாமாக கற்பனை செய்து கொண்டு அச்சப்படுகிறோம். நாம் அச்சப்படுவதாலேயே எதிர் சக்திகளுக்கு தைரியம் வந்து விடுகிறது. எனவே பயந்தாங்கொள்ளியைக் கண்டு அதைவிட பயந்தாங்கொள்ளி அச்சப்பட்டால், முதல் பயந்தாங்கொள்ளியும் வீரனாகிவிடுவான்.

எவ்வளவு இடையூறுகள் தோன்றினாலும் நாம் எடுத்துக்கொண்ட முயற்சியை இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வெற்றி காண்பதைத்தான் நாம் ‘துணிச்சல்’ ‘தைரியம்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறோம்.

பயத்தை வெல்வதற்கு நீங்கள் எந்த காரியத்தைச் செய்ய பயப்படுகிறீர்களோ அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் சிறந்த பாடகராக உருவாக ஆசைப்படுகிறீர்களா? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நன்கு தயார்படுத்திக் கொண்டு பாட ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு நடுக்கம் ஏற்படக்கூடும். உங்கள் குரலின் தடுமாற்றத்தைக் கண்டு மற்றவர்கள் கேலியாகச் சிரிக்கலாம். ஆனால் முயற்சியைக் கைவிட்டு விடாதீர்கள். தொடர்ந்து பாட முயற்சியும் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.

பல இடங்களில் இப்படித் தொடர்ந்து பாடி வரும் போது, உங்கள் குரல் மெருகேறும் மேலும் மற்றவர்களின் கருத்துக்களை சிறந்த முறையில் சுலபமாக எடுத்துச் சொல்லும் திறமை உங்களுக்கு கிடைத்து விட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள். பாடத்; தொடங்கிய ஆரம்பகால பயம் தற்போது உங்களை விட்டுச் சென்று விட்டதையும் நீங்கள் காண்பீர்கள்.  இப்படி நீங்கள் பயப்படும் எந்தக் காரியத்தையும் வலுக்கட்டாயமாகத் தொடர்ந்து செய்து வந்தால் பயப்படும் குணம் உங்களை விட்டு அகன்று சென்று விடுவதை நீங்கள் காணமுடியும்.
கவலைப்படும் பழக்கம் ஒரு நோய்

கவலைப்படுவது என்பது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகி விடுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள், அதாவது கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகிவிடுகிறது.  பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கிக் கொள்கிறோம். நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்.  ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள், அதுவே அவனை அவதிப்படுத்துகின்றன. ஒன்று கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு, மற்றொன்று எதிர்காலத்தில் என்னாகுமோ என்ற பய விளைவு.  வெற்றிபெற விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளையும் தூக்கி தூர எறிந்து விட்டு வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

கவலைகள் ஒருவனின் உடலில் இருக்கும் மின்சார சக்தியை உறிஞ்சி விடுகின்றன. ஒருபோதும் நீங்கள் கவலைப்படும் மனிதனாக உருவெடுக்காதீர்கள்.  நீங்கள் வெற்றியாளராகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள விரும்பினால் கவலைப்படும் பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

தயக்கம் தாழ்வுக்குக் காரணம்

எதிலும் சிலர் தயக்கம் காட்டுவதற்குக் காரணம் அவநம்பிக்கை. அவநம்பிக்கைக்குக் காரணம் மனோதிடம் - மன உறுதி - இன்மை. ஒரு முடிவு எடுப்பார்கள்;.  அது சரி வராது என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லி விட்டுப் போய்விட்டால், உடனே தங்கள் முடிவில் வேறொருவரை அனுகி, தன் முடிவு சரிதானா என்று கேட்பார். அவர் இன்னொரு புதிய யோசனையை சொல்வார்.

யோசனை கேட்பவரை விட யோசனை சொல்பவர் அதிக சுயநலவாதியாக இருப்பார். யோசனை கேட்பவரை எதில் இறக்கிவிட்டால் தனக்கு லாபம் என்று யோசிப்பார். அல்லது தனக்கு பயன் ஏற்படக் கூடிய யோசனையாக எதிரியின் திட்டம் இருந்தால் ‘அருமையான முடிவு உடனே செய். நான் இருக்கிறேன்; பார்த்துக் கொள்கிறேன்’ என்று தூண்டிவிடுவார்.  அவ்வளவு தான். அதனால் நாலுபேரிடம் விசாரித்துக் கொண்டு ஒரு முடிவு எடுப்பதில் தவறில்லை.

முடிவு எடுத்த பிறகு, காரியத்தில் இறங்குவது தான் விவேகமே தவிர, முடிவு எடுத்த பிறகு அதுபற்றி யாரிடமும் யோசனை கேட்பது பேதைமை. அது அச்சம், அவநம்பிக்கையின் விளைவு.   இப்படிப்பட்டவர்கள், வாழ்க்கையில் செய்து முடித்த காரியங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், வாழ்க்கையின் கீழ்மட்டத்திலேயே தங்கி, வாழ்க்கையின் குறைந்த தேவைகளைக் கூடப் பெறாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.  தனக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடியவைகளையும் கோட்டை விட்டு விடுவார்கள்.  நான் இதை இப்படிச் செய்யப் போகிறேன். நாளை அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று நினைப்பவன் தயங்காமல், தான் விரும்பும் காரியங்களை ஆரம்பித்து, அவற்றை ஒழுங்காக செய்து முடிப்பான்.

நீங்கள் தயக்கப் பேர் வழியாக மட்டும் இல்லாதிருந்தால் போதாது.  தயக்கம், அவநம்பிக்கை, சோர்வு மனப்பான்மை கொண்டவர்களையும் நீங்கள் கிட்டே சேர்க்கக் கூடாது. இவர்களுடன் சேர்ந்து தொடங்கும் எந்த காரியத்திலும் உங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். அல்லது நடுவழியிலேயே இவர்கள் உங்களை விட்டு விட்டுப் பின்தங்கி விடுவார்கள். நீங்கள் வேறு துணை தேட வேண்டியிருக்கும். 

உணர்ச்சி வசப்படாதீர்கள்

இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கை ஒரு நாளைக்கு நூறு முறை உணர்ச்சிவசப்படச் செய்வது. கிராமிய வாழ்க்கையில் உள்ள அமைதி நகர வாழ்க்கையில் இல்லை. காரணம், இங்கே எல்லாம் கடிகாரத்தையொட்டிய வாழ்க்கை, காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு வாழ வேண்டிய நிர்பந்தம்.  உங்கள் மன தைரியத்தைக் குலைப்பதும் ஒரு வகை உணர்ச்சிதான். கோபம், பொறமை போல இதுவும் நம்மை கீழ்மைப்படுத்தும் உணர்ச்சிதான். இப்படியான கெடுதல் தரும் உணர்ச்சியை ஒருவன் புறக்கணிக்க வேண்டும். நம் உள்ளங்களில் சில சமயங்களில் உணர்ச்சிகள் பேயாட்டம் போடுகின்றன. காரணம், அந்த வகையான எண்ண ஓட்டங்களை நம் மனதுள் நாமே அனுமதிப்பது தான் காரணம். உடலுக்கும் உள்ளத்துக்கும் கெடுதல் தரும் உணர்ச்சி என்றால், அந்த உணர்ச்சி மனதில் தோன்றும் போதே வெளியேற்றி விட வேண்டும்.

எவர் ஒருவருக்கு எந்த ஒரு விஷயத்திலும் நஷ்டம் ஏற்படலாம். அந்த நஷ்டம் ஒரு விஷயமல்ல் அந்த நஷ்டம் அவன் உள்ளத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிகளே அவன் வாழ்வைப் பெரிதும் பாதிக்கின்றன.

சிலர் தங்கள் சொத்துக்களை முழுமையாக இழந்துவிட்ட நிலையிலும் கூட, “ஆமாம். இழந்துவிட்டேன். அவற்றை மீண்டும் பெறுவேன். அதற்கான வேலைகளை எப்போதோ தொடங்கிவிட்டேன். அது விஷயமாகத்தான் இப்போது இன்ன காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் பழைய நிலைக்கு முன்னேறி விடுவேன்” என்பார் வெற்றியாளர். சொன்னது போலவே தீவிரமான செயலிலும் ஈடுபட்டிருப்பார்.

ஆனால் தோல்வியாளர்கள் நஷ்டமடைந்து விட்டால் அதை எண்ணி எண்ணியே மருகி, புதிய முயற்சி எதிலும் ஈடுபடாமல் சோம்பி விடுவார்கள்.

சில பேர் தங்கள் முயற்சியில் தொடக்க நஷ்டம் வந்தவுடனேயே பயந்து பின்வாங்கி விடுவார்கள். பிறரது செய்கை, பேச்சு உங்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், அவற்றைப் புறக்கணியுங்கள். உணர்ச்சி வசப்பட்டு சண்டை, விவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதியை இழக்காதீர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து