முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது: மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று (24.10.2017) டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீரை மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் அவர்களும், கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்களும் வழக்கறிஞர்களுக்கு வழங்கினார்கள்.

அரசுக்கு பாராட்டு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் அவர்கள் பேசியதாவது. தமிழக அரசால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் டெங்கு கொசுவானது நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது என்பதை ஒவ்வொரு உணர்ந்து தங்களின் வீட்டின் உள்ளே உள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். இக்கொசுவானது இரண்டு அல்லது மூன்று அடிக்கு மேல் பறக்கும் தன்மை அற்றதால் குழந்தைகள், முதியோர்களை எளிதில் கடித்து காய்ச்சலை உருவாக வாய்ப்பாக அமைகிறது.

 

மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நிலவேம்பு குடிநீர் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பக்க விளைவுகள் இல்லாமல் அமைந்துள்ளது. குறிப்பிடப்பட்ட அளவில் இந்த நிலவேம்பு குடிநீரை அருந்துவதுடன் வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பது சிறந்தது என்ற அடிப்படையில் சுகாதாரமான சூழ்நிலையினை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசியதாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டெங்கு ஒழிப்பு பணிக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொசு ஒழிப்பு நடவடிக்கையினால் காய்ச்சலின் தாக்கம் படிபடியாக குறைய தொடங்கி உள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் குளிர்சாதன பெட்டி, திறந்த நிலையில் உள்ள நல்ல தண்ணீர் ஆகிய இடங்களில் டெங்கு கொசு உற்பத்தி ஆகாத வகையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் அவர்கள் இடங்களிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வாய்ப்பாக அமைகிறது. மாவட்ட முழுவதும் தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக்கூடிய நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இந்த பணிக்கு ஒத்துழைப்பு அளித்துவரும் நீதித்துறையை சார்ந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஸ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி, அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரன், பொது வழக்கறிஞர் பி.தனசேகரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து