முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்டாஞ்சாவடி செந்தில் கைது செய்யப்பட்ட விதம் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் மக்கள் உரிமை கூட்டமைப்பு குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      புதுச்சேரி

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவையில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தட்டாஞ்சாவடி செந்திலை முட்டி போட வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்கைது செய்யப்பட்டது குறித்து நேற்று முன்தினம் முதுநிலை காவல் கண்காணப்பாளர் ராஜீவ்ரஞ்சன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செந்திலை தரையில் முட்டிப் போட வைத்திருந்த காட்சி ஊடகங்களில் செய்தியாக புகைப்படத்துடன் வந்துள்ளது.

மனித உரிமை மீறல்

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய செந்தில் மீது சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காவல்துறை உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட செந்திலை முட்டி போட வைத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். வாழ்கிற உரிமையை உறுதி செய்துள்ள இந்திய அரசியல் சட்டப்பிரிவு 21-ன் படி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள பல்வேறு தீர்ப்புகளில் அரசோ அல்லது அதனை சார்ந்த நிறுவனங்களோ தனி மனித கவுரவத்திற்கு பங்கம் விளைவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என கூறியுள்ளது. மேலும் செந்தில்கைது செய்யப்பட்டபோது டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி கடைப்பிடிக்க வேண்டிய 11 கட்டளைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும்.எனவே செந்திலை முட்டி போட வைத்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு புதுவை அரசு உத்தரவிட வேண்டும். இதில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஊடகங்களில் வெளிவந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து