முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் 558 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் : அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் , எஸ்.வளர்மதி வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், கண்ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவ, மாணவிகளுக்கும், திருச்சிராப்பள்ளி சாவித்திரி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 422 மாணவ, மாணவிகளுக்கும், மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 64 மாணவ, மாணவிகளுக்கும், என மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று (17.11.2017) வழங்கினார்கள்.

 அமைச்சர் பேச்சு

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் எம்.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாட்டை கல்வி வளர்ச்சியில் தன்னிகரில்லாத முதல் மாநிலமாக்கிட வேண்டுமென்று உறுதிபூண்டு அந்த எண்ணத்தை எண்ணியவாறு நிறைவேற்றிட தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு வழங்கி எண்ணில்லடங்கா திட்டங்களை செயல்படுத்தி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்கள்.

அம்மா கொண்டுவந்த பல்வேறு மகத்தான திட்டங்களால் அன்று பள்ளி செல்லத் தயங்கிய குழந்தைகள் இன்று பள்ளிக்கூடம் செல்ல சிட்டாய் பறக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா பள்ளி மாணவர்களின் கல்விக்கு தேவையான பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, காலணி, மிதிவண்டி, பேருந்து பயண அடடை, நிலவரைபட புத்தகம், கிரையான்ஸ், வண்ணப் பென்சில், ஜியாமென்டிரி பாக்ஸ், புத்தகப்பை, சீருடை போன்ற அனைத்தும் விலையில்லாமல் வழங்கிட ஆணையிட்டு பள்ளி கல்வித்துறையில் மாபெரும் புரட்சி செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் மகுடமாக மாணவ, மாணவியரின் அறிவு விளக்கத்தைத் தூண்டிவிடும் வகையில், விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2011 முதல் இதுவரை 40 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. 2016-17ம் கல்வியாண்டில் மட்டும் 10,178 மாணவர்களுக்கும், 13577 மாணவிகளுக்கும் என மொத்தம் 23,755 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 40 கோடி மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஊக்கத்தொகை மேற்படிப்பு பயிலுவதற்கு மிகவும் உதவி கரமாக உள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க பள்ளிகள் முதலாக மேல்நிலைப்பள்ளிகள் வரை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கும் வகையில் சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் பெற்று கல்லூரிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் இருப்பதாக அனைவரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.

அமைச்சர் வளர்மதி

விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் வளர்மதி பேசியதாவது: புரட்சித்தலைவி அம்மா காலத்தில் தான் பள்ளிக்கல்வித்துறையில் ஒரு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் தலைச்சிறந்த துறையாக பள்ளிக்கல்வி துறை செயல்படுகிறது. குழந்தைகளின் ஆரம்பக்கல்வி முதல் அவர்களின் உயர்கல்வி வரை அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் மீது அதிக அக்கறை கொண்டு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நகர்புற மாணவர்களுக்கு இணையாக கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இன்று விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. இக்கணினியின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உள்ளங்கையில் வைத்து தங்கள் அறிவை பெருக்கி கொள்ளலாம். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தலைமைசெயலகத்தில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை சந்தித்த போது விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை பாராட்டினார்கள்.

எனவே மாணவச் செல்வங்கள் நன்றாக படித்து சிறந்த பொறியாளராக, மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, வரவேண்டும். நன்றாக படித்து பள்ளிக்கும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரபாண்டியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பத்மநாதன்,மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் டி.வைதேகி(கண்ணுடையான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி), ஆர்.சுசிலா (சாவித்திரி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஜெயசிம்மன் (மிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி), முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஐயப்பன், முஸ்தபா, மகாலெட்சுமி, மற்றும் வழக்கறிஞர் ராஜ்குமார், அருள்ஜோதி, பாலசுப்ரமணியன், கலீல்ரகுமான், அன்பழகன், சுரேஷ்குப்தா, கண்ணதாசன், வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து