முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி நியமனம்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு அளித்துள்ளது. அப்பதவியில் தொடர்ந்து மூன்றாண்டுகள் வரை சிவன் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அப்பொறுப்பினை சிவன் ஏற்றுக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன், தற்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் வானியல் பொறியியல் படிப்பையும், அதைத் தொடர்ந்து பெங்களூரில் விண்வெளி ஆராய்ச்சி முதுநிலைப் படிப்புகளையும் சிவன் நிறைவு செய்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் அவர் பெற்றுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானியாக 1982-ஆம் ஆண்டு இணைந்த சிவன், பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவராவார். இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களில் அவர் பங்களித்துள்ளார். அவரது சேவையைப் பாராட்டி சத்தியபாமா பல்கலைக்கழகம் அறிவியல் துறையில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உள்பட பல்வேறு விருதுகளையும் சிவன் பெற்றுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி 40 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சிவன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து