முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமியர்களின் புனித யாத்திரைக்கான ஹஜ் பயண மானிய ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். கூட்டாக வலியுறுத்தல்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ் பயணத்திற்கான மானிய ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். மேலும், தினகரன் மற்றும் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்புமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிவாரண உதவி

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஜிஆரின் உருவச்சிலை அக்கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது, எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி இருவரும் இனிப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கினர்.

பிரதமருக்கு அழைப்பு

இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் தேதி கொடுத்ததும் விழா நடைபெறும். இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களைமீட்க நடவடிக்கை எடுக்கும் படி பிரதமருக்கும் வலியுறுத்தியுள்ளோம்.

மறுபரிசீலனை...

ஹஜ்பயணத்தின் மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தோம். இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் இருந்து வெளிமாநிலம் சென்று படிக்கும் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பை முன்னிட்டு, தமிழக அரசிடம் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அ.தி.மு.க. தயார்...

ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரன் கட்சி ஆரம்பிப்பது குறித்து  அவரிடம்தான் கேட்கவேண்டும். மேலும் அவர் புதுக்கட்சி தொடங்குவதால் அ.தி.மு.கவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 10 ஆண்டுகள் அவர் கட்சியிலே இல்லை. அவர் எங்கு போனார் என்று கூட தெரியாது. அப்போது கட்சி ஏதாவது பாதிப்பை சந்தித்ததா? ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மட்டுமே அவரை பெரிது படுத்துகின்றீர்களே தவிர, மக்கள் யாரும் அவரை நினைக்கவே இல்லை.

உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க எப்போதும் தயாராக உள்ளது. மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளது உட்கட்சி பிரச்சனை, குடும்ப பிரச்சனையை யாராவது வெளியே சொல்வார்களா? அதை பற்றி பொதுவெளியில் விவாதிக்கவிரும்பவில்லை. மதுசூதனனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. அவரும் திருப்தியடைந்து விட்டார்.

பிரதமரை சந்திப்பேன்...

இந்தியாவின் நிதி அறிக்கை தாக்கல் செய்வதக்கு முன்னாள் மத்திய அமைச்சரால் கூட்டம் கூட்டப்படும். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் (ஓ.பன்னீர்செல்வம்) புதுடெல்லி செல்கிறேன். தேவைப்பட்டால் பிரதமரை சந்திப்பேன். பிரதமரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் காவிரி பிரச்னை குறித்து கோரிக்கை வைப்பேன். காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும், காவிரிநீர் பங்கீடு குறித்தும் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தேவை என மத்திய அரசிற்கும், பிரதமருக்கும், கர்நாடக முதல்வருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் ஒரு பயனும் இல்லை.

பங்கிட்டு தர...

நீதிமன்றத்தில் இடைக்கால வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில் தீர்ப்புவரஇருக்கிற காரணத்தினாலே இந்த மனுவை ஏற்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார்கள். இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்கான பதில் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசை பொருத்தவரையில் இருக்கிற தண்ணீரை சமமாக பங்கிட்டு விவசாயிகளுக்கு தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சியில் உள்ள நிர்வாகிகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வரும்.

பாதிப்பு இல்லை...

நடிகர் கமல்ஹாசன் தனிக் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதுபற்றி  கருத்து சொல்கிறேன். தனிக்கட்சியானாலும், கூட்டாக கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.கவுக்கு  யாராலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. பட்டாசு தொழிலாளர்கள்  குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நீதிமன்றத்திலும் இது குறித்துவழக்கு தொடரப்பட்டு மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நேற்று காலை 11 மணி முதல் 12 மணிவரை சுமார் ஒரு மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்துவது குறித்தும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள்  விழாவையொட்டி வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி என்னென்ன நலத்திட்ட உதவிகள் மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை  துணைசபாநாயகருமான தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, ஜெயகுமார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வீரமணி, சரோஜா, சீ.வளர்மதி, ராஜலட்சுமி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மணிகண்டன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, துரைக்கண்ணு, ராமகிருஷ்ணரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், பாடநூல் வாரியத்தலைவர் பா.வளர்மதி, எம்.ஜிஆர். இளைஞர் அணி செயலாளர் அலெக்சாண்டர், மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், வழக்கறிஞர் அணி செயலாளர் நவநீதக்கிருஷ்ணன் எம்.பி., மாவட்ட செயலாளர்கள், வி.என்.ரவி, பாலகங்கா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், முன்னாள் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்,எம்,.டி.ரவீந்திரஜெயன், முன்னாள் கவுன்சிலர் டி.சிவராஜ், ஆயிரம்விளக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து