ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகம்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Tomatto 11 2 18

 ஒட்டன்சத்திரம்.- ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகம் காரணமாக உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளியை ரோட்டில் கொட்டி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, சாமியார்புதூர், வேலூர்-அன்னப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, தொப்பம்பட்டி ஒன்றியம் தேவத்தூர், கள்ளிமந்தையம், கொத்தையம், மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, கப்பலப்பட்டி, 16-புதூர், ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி நடவு செய்து வருகின்றனர்.
தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகம் காரணமாக விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் தக்காளி நுகர்வு குறைவு காரணமாகவும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த மாதம் 15 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாகவும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து தமிழகம் முழுவதும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான டன் தக்காளி தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து