யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நன்கொடையாக நூல்கள் வழங்கியவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு:

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      மதுரை
rpulibrary paaraattu 11 2 18

திருமங்கலம்.- இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசித்திடும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மிகவும் பழமையான யாழ் நூலகத்தை மேம்படுத்திடும் பணிக்கு ஆயிரக்கணக்கான நூல்களை திருமங்கலம் கிளை நூலகத்தில் நன்கொடையாக வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழர்கள் அதிகம் வசித்திடும் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பழமையான யாழ் நூலகம் சிதைந்து போய்விட்டது.இதனிடையே உள்நாட்டு போர் முடிந்து தற்போது தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக சிதைந்து போன வரலாற்று சிறப்புமிக்க யாழ் நூலகத்தை புதுப்பித்து மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக யாழ் நூலகத்திற்கு 1லட்சம் நூல்களை வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில் 1லட்சம் புத்தகங்களும் கூடுதலாக ஒவ்வொரு கிளை நூலகத்திலும் பொதுமக்களிடமிருந்து நூல்களை சேகரித்திடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனிடையே மதுரை மாவட்டம் திருமங்கலம் கிளை நூலகம் சார்பில் யாழ் நூலகத்திற்கு நூல்களை வழங்கி உதவிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து திருமங்கலம் பகுதி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கான புதிய நூல்களையும் அரியவகை பழமையான நூல்களையும் வழங்கினார்கள்.மேலும் திருமங்கலம் கிளை நூலகத்தில் பெரும் புரவலராக உள்ள தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது சார்பில் ரூ.15ஆயிரம் மதிப்புடைய 500 நூல்களை யாழ் நூலகத்திற்காக வழங்கியுள்ளார்.அதன்படி யாழ் நூலகத்திற்கு நன்கொடையாக நூல்களை வாரி வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு பாராட்டு விழா நேற்று மாலை திருமங்கலம் கிளை நூலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு மதுரை மாவட்ட நூலக அலுவலர் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.திருமங்கலம் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் புலவர்.வெ.சீனிச்சாமி முன்னிலை வகித்தார்.திருமங்கலம் கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் த.இளங்கோ வரவேற்று பேசினார்.ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் வாசகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு யாழ்ப்பாணம் நூலகத்திற்கு நன்னொடையாக ஆயிரக்கணக்கான நூல்களை வாரிவழங்கிய நல்ல உள்ளங்களுக்கு பொன்னாடை அணிவித்தும்,பரிசுகள் வழங்கியும் பாராட்டு தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன், திருமங்கலம் நகர் அவைத்தலைவர் ஜஹாங்கிர்,முன்னாள் திருமங்கலம் நகர் மன்ற துணை சேர்மன் சதீஸ்சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் திருமங்கலம் கிளை நூலக மூன்றாம் நிலை நூலகர் மலர்விழி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து