முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ராணுவம் நடத்திய பதிலடி : 4 தீவீரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு :  காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ராணுவம் அளித்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு நகரின் புறநகர் பகுதியில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை நுழைந்த ஜெய்ஸ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உள்பட, 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கினர். இந்த தேடுதல் வேட்டையின் போது ராணுவ முகாமுக்குள் இருக்கும் குடியிருப்புகளில் தங்கி இருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை பத்திரமாக வெளியேற்றினர். இதையடுத்து பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் கடுமையாக துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் நேற்று முன்தினம் மாலையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் ராணுவத்தினருடன் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதேசமயம், இரு தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து ராணுவ முகாமின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினென்ட் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், தீவிரவாதிகளுடன் தொடர்ந்து ராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். முகாமில் தங்கி இருக்கும் 150 ராணுவத்தினர் குடும்பமும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, முகாம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகாமின் பின்பக்கம், முகப்புப் பகுதியில் ராணுவத்தினரின் குண்டு துளைக்காத வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜம்மு-லக்கன்பூர் புறவழிச்சாலையில் இந்த ராணுவ முகாம் அமைந்து இருக்கிறது. ஆனாலும், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் ராணுவத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

முகாமைச் சுற்றி சி.ஆர்.பி.எப் படையினரும், போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 9-ம்தேதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவுதினம் வருவதால், ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்கெனவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து