முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அடுத்த மாதம் 5,6,7 தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அடுத்த மாதம் 5,6,7-ம் தேதிகளில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும்...

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள் பங்கேற்று தத்தம் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து விவாதிப்பர். 

முதல்வர் பங்கேற்பு...

முதல் நாள் மாவட்ட கலெக்டர்களுடனும், மறுநாள் காவல் துறை அதிகாரிகளுடனும் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதை தொடர்ந்து 3 வது நாள் மாநாட்டில் இருதரப்பு அதிகாரிகளும் பங்கேற்பர். மாநாட்டை முதல்வர் தொடங்கி வைப்பது மட்டுமல்லாமல், இறுதி நாள் நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொள்வார். இந்த மாநாட்டில் அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கையாளுவது குறித்தும் விரிவாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

மூன்று நாட்களுக்கு...

கடைசியாக 2013-ம் ஆண்டில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடனான மாநாடு நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் வர்தா புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகாரிகளுடனான மாநாடு நடத்த இயலாமல் போனது. இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த மாதம்  5-ம் தேதி முதல் முதல் 3 நாட்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கலெக்டர்கள் கூட்டம்...

மேலும்  மார்ச்  5-ம் தேதி கலெக்டர்கள், காவல்துறை ஆணையர்கள் ஒருங்கிணைந்த கூட்டமும், மார்ச் 6-ல் மாவட்ட கலெக்டர்களுக்கான கூட்டமும், அதனைத் தொடர்ந்து மார்ச் 7-ல் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து