முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆறுதல் - உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு  தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவிதொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை...

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னை, சேலம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் 80 சதவீத தீக்காயமடைந்தனர். மேலும் சிலர் லேசான தீக்காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் மற்றும் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தனி இட வசதி மற்றும் படுக்கை வசதி செய்யப்பட்டு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முதல்வர் ஆறுதல்...

இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று தீக்காயமடைந்தவர்களை ஒவ்வொருவராக சென்று பார்த்து ஆறுதல் கூறினர். விபத்து நடந்த விபரங்கள் பற்றியும் அவர்கள் கேட்டறிந்தனர்.  இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் காயமடைந்தவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டார். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, கே. மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன், ஏ.கே. போஸ், நீதிபதி, பெரியபுள்ளான் ஆகியோரும் உடன் சென்றனர். 

அனுமதி பெறாமல்...

தீக்காயம்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

காட்டூத்தீ விபத்தில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ட்ரக்கிங் சென்றவர்கள் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளார்கள். தற்போது வறட்சி காலம் என்பதால் விலங்குகள் தண்ணீரை தேடி வரும். எனவே மலையேறுவதற்கு இந்த காலக்கட்டத்தில் அனுமதி கிடையாது. ட்ரக்கிங் சென்றவர்கள் வனத்துறையினரிடம் அனுமதியை பெறவில்லை. காட்டுத் தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல் இப்படிப்பட்ட பயிற்சி மேற்கொள்ளும் போது அரசின் அனுமதியை பெற்று செல்ல வேண்டும்.

ஆபத்தான சூழ்நிலை...

கோடை காலத்தில் மலைப் பகுதிகளில் மரங்கள், இலைகள் காய்ந்து பட்டுப்போய் இருக்கின்ற சூழ்நிலையில் தீ விபத்து ஏற்பட்டால் அது தீவிரமாக பரவக் கூடிய நிலை உருவாகும். எனவே இப்படிப்பட்ட காலங்களில் மலையேறுவதற்கு அரசு அனுமதி கிடையாது. எனவே இனிவரும் காலத்தில் இதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் உரிய அனுமதி பெற்றுத்தான் மலையேற வேண்டும் என்று ஏற்கனவே சட்டம் அமலில் இருக்கிறது. அவற்றையெல்லாம் மீறி சென்றதால்தான் இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் செல்லும் போது அரசின் அனுமதி பெற்று சென்றால்தான் தகுந்த பாதுகாப்பு கொடுக்க முடியும். அதையெல்லாம் இவர்கள் எதையுமே பெற்றுக் கொள்ளாமல் மலையேறி உள்ளதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பத்துபேரை பலி கொண்ட காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விபத்தில் உயிரிழந்த பத்துபேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி  அறிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தேனி மாவட்டம், போடி வட்டம், குரங்கணி மலைப்பகுதியில், 11-ம் தேதி கொழுக்குமலை கிராமத்திலிருந்து குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்த, மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில், சிக்கிக் கொண்டனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். இந்தக் கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வனத்துறை அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் வனத் துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குவிரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

எனது உத்தரவின் பேரில், தற்போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

26 பேர் மீட்பு...

தீயணைப்புத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் ஆகியோர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில் இருபத்தாறு நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் வேண்டுகோளினை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஹெலிகாப்டர் மற்றும் கமாண்டோ படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள்அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனதுவிருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.4 லட்சம் நிதியுதிவி...

காட்டுத் தீயில் சிக்கியவர்களில் சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா,புனிதா, சுபா, அருண், விவின், நிஷா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய பத்து நபர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்குதலா 50,000/- ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்கநான் உத்தரவிட்டுள்ளேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து