முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்’’ மத்திய அமைச்சர்களுக்கு நிதிஷ் குமார் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா: மதவெறியை தூண்டும் வகையில் மத்திய அமைச்சர்கள் பேசுவதை ஏற்க முடியாது, இந்த விஷயத்தில் பா.ஜ.க தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை தொடர்ந்து, பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த மக்களவை இடைத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. பிகார் மாநிலத்தில், பா.ஜ.க தோல்வியுற்ற அராரியா மக்களவைத் தொகுதி விரைவில் தீவிரவாதிகள் சங்கமிக்கும் இடமாக மாறும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். அதுபோலவே மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயும் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார்.

‘‘மக்களவை இடைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய அதிருப்தியின் விளைவாகும். குறிப்பாக சிறுபான்மை மக்கள், தலித் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை பாஜக தலைவர்கள் எடுத்ததன் காரணமாக இந்த தோல்வி கிடைத்துள்ளது. பாஜக தலைவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டியது இனிவரும் காலங்களில் அவசியமானதாகும். மத்திய அமைச்சர்கள் நித்யானந்த் ராய், கிரிராஜ் சிங் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தலித்களுக்கு எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ‘‘ஊழல் ஆனாலும் சரி, சமூகத்தை பிளவு படுத்தும் மதவெறியானாலும் சரி, அதில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மதச்சார்பற்ற தன்மையும், சமூக ஒருங்கிணைப்பும் அன்பும் நாடுமுழுவதும் நிலவ வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

உயர் பதவியில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடாது. பிகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் கைவிட்டு விடவில்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போராடுவேன்’’ எனக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து