முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை தீவன 4-வது ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை - ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 4-வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

சிறை தண்டனை..

தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் லல்லுவுக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

தலா 5 ஆண்டுகள்...

இந்த நிலையில் கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் 2 வழக்குகளில் லல்லு தண்டிக்கப்பட்டுள்ளார். சைபாசா கருவூலத்தில் நடந்த ரூ.37.7 கோடி கையாடல் வழக்கில் லல்லுவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் இவ்வழக்கில் லல்லு ஜாமீன் பெற்றுள்ளார். சைபாசா கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி கையாடல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அவருக்கு கடந்த ஜனவரி 24-ம் தேதி 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளி என...

இந்நிலையில், மாட்டுத் தீவன ஊழல் 4-வது வழக்கில் லல்லு குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. தும்கா கருவூலத்தில் மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 19 பேரின் குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்தது.

14 ஆண்டுகள்...

இவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தலா 7 ஆண்டுகள் வீதம் லல்லுவுக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதாவது, அடுத்தடுத்து 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் மற்றவர்களுக்கான தண்டனை விவரமும் வெளியிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து