முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களை உளவு பார்க்கிறார் மோடி: காங். தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரதமர் மோடி, நாட்டு மக்களை உளவு பார்க்கிறார்; அவர் ஒரு 'பிக் பாஸ்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ராகுல் காந்தியை 'சோட்டா பீம்' என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ செயலி 'நமோ ஆப்' மூலமாக, அதைப் பயன்படுத்துவோரின் தகவல்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே திருடப்படுகின்றன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பிரதமர் பதவியை மோடி தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், இந்தப் பிரச்னையை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கம் மூலமாக திங்கள்கிழமை மீண்டும் எழுப்பினார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் நண்பர்களின் தகவல்கள், ஆடியோ மற்றும் விடியோக்கள், பிரதமரின் மோடி 'நமோ ஆப்' மூலமாகத் திருடப்படுகின்றன. நீங்கள் இருக்கும் இடம் கூட ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்கும் அவர் (மோடி) ஒரு பிக் பாஸ்.

தற்போது நம்முடைய பிள்ளைகளின் செயல்களையும் உளவு பார்க்கும் வேலையில் அவர் இறங்கி விட்டார். 'நமோ ஆப்' செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு 13 லட்சம் என்சிசி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டு மக்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறார் என்றால் அதில் எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனால், அவர் பயன்படுத்தும் 'நமோ ஆப்' செயலி, பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ செயலியாகும். அந்தச் செயலியில் இடம்பெற்றுள்ள தகவல்கள், அவருக்குச் சொந்தமானவை அல்ல; அவை இந்தியாவுக்குச் சொந்தமானதாகும் என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'சோட்டா பீம்' ராகுல்:
 அதையடுத்து, ராகுல் காந்தியைக் கேலி செய்து மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''என்.சி.சி. என்றால் என்னவென்று ராகுல் காந்தி தெரிந்து கொண்டு விட்டார்; பிரதமரின் நமோ ஆப் செயலிக்கு நன்றி. சோட்டா பீம் கூட பிரதமரின் நமோ ஆப் செயலி பற்றி பேசுகிறார்'' என்று ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.

திசை திருப்புகிறார் ராகுல்:
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் திட்டத்தை பாஜக அம்பலப்படுத்தி விட்டதால், அதிலிருந்து திசை திருப்புவதற்கு மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறினார்.

இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
முகநூல் பயனாளர்களின் தகவல்களைத் திருடியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் உதவியுடன் அடுத்த மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்தது. அந்தச் சதியினை பாஜக அமல்படுத்திவிட்டது. அதிலிருந்து திசை திருப்புவதற்காக, பிரதமரின் நமோ ஆப் செயலி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

ராகுல் காந்திக்கு தொழில்நுட்ப அறிவு கிடையாது. அதனால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அவர், தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு 'நமோ ஆப்' செயலிதான் காரணம் என்றும் நாளை குற்றம் சாட்டுவார்.

அந்தச் செயலி வழியாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரதமர் மோடியும், பாஜகவும் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுவார். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பழமையானவை என்றார் சாம்பித் பத்ரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து