முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஜாம்பியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜாம்பியா: இந்தியா - ஜாம்பியா இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின. இரட்டை வரி விதிப்பு தடுப்பு, நீதித் துறை ஒத்துழைப்பு உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவையாகும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க நாடுகளான ஈக்வடோரியல் கயானா, ஸ்வாஸிலாந்து ஆகியவற்றுக்கு பயணம் மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த், அதன் தொடர்ச்சியாக ஜாம்பியாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜாம்பியா அதிபர் எட்கர் சங்வா லூங்கூவுடன் அவர் புதன்கிழமை கலந்துரையாடினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்தனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜாம்பியா முன்னெடுக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு அதிபருடனான சந்திப்பின்போது ராம்நாத் கோவிந்த் உத்தரவாதம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவிலும், ஜாம்பியாவிலும் பரஸ்பரம் வசிக்கும் இரு நாட்டவர்களுக்கும் இரட்டை வரி விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தம் அவற்றில் ஒன்று.

அதேபோன்று நீதித் துறை சார்ந்த ஒத்துழைப்புகளை நல்குவது இரண்டாவது ஒப்பந்தமாகும். அடுத்ததாக, இரு நாட்டு பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை ரத்து செய்வது தொடர்பான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

நான்காவதாக, ஜாம்பியாவில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தை இந்தியா அமைப்பது குறித்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து