முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்துச்சண்டை: தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன் தங்க பதக்கம் வென்றார்.

ஆண்கள் குத்துச்சண்டை பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மணீஷ் கவுசிக் ஆஸ்திரேலியாவின் ஹாரி கார்சைட் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மணீஷ் கவுசிக் 3-2 என்ற செட் கணக்கில் ஹாரி கார்சைட்டிடம் தோல்வி அடைந்தார். நூலிழையில் தங்க பதக்கத்தை தவற விட்டார். இதன் மூலம் வெள்ளி பதக்கத்தை அவர் கைப்பற்றினார்.

குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார். அவர் வடக்கு அயர்லாந்தின் பிரெண்டன் இர்வைன் உடன் மோதினார். இந்தப் போட்டியில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று கவுரவ் சோலாங்கி தங்கப் பதக்கத்தினைத் தட்டிச் சென்றுள்ளார். இது இந்தியாவுக்கு நேற்று கிடைத்த 2வது தங்கம்.

ஆண்களுக்கான 46-49 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமிட் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாய் இடம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஹாரி கார்சைட் இடம் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார். ஆண்களுக்கான 91 கிலோவுக்கு அதிகமானோர் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சதிஷ் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வி அடைந்தார்.

மகளிர் குத்துச்சண்டை பிரிவில் இறுதிச்சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மேரிகோம் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர் கொண்டார். நேற்று நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் மேரிகோம் 4-0 என வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.  இந்த பதக்கத்தை வென்றதன் மூலம் மூலம் இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 43 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடந்து நீடித்தது.

ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
ஆடவர் ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார். அவர் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்த தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப்பதக்கம் வென்றார்.

டேபிள் டென்னிஸ்: பதக்கம் வென்றார் மணிகா பத்ரா
மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா, சிங்கப்பூரின் மெங்யூ யூவை எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மணிகா பத்ரா, 11-7, 11-6, 11-2, 11-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இது இந்தியாவுக்கு கிடைக்கும் 24வது தங்கப்பதக்கமாகும்.

கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் - சவுரவ் கோசல் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா 24 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.
முன்னதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் - ஷரத் அச்சந்தா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

மல்யுத்தம்: வினேஷ் போகத் தங்கம் வென்றார்
மகளிருக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் சுமித் தங்கப்பதக்கம் வென்றார்.

மகளிருக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் கனடாவின் ஜெசிக்கா மெக்டொனால்டை வீழ்த்தினார்.
ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சோம்வீர் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் கனடாவின் அலெக்சாண்டர் மூரை வீழ்த்தினார்.

ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் இறுதிப்போட்டியில் நைஜீரியாவின் சினிவீ போல்டிக்கை எதிர்கொள்வதாக இருந்தது. ஆனால் நைஜீரியா வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

பேட்மிண்டன்: இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்
மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா - குரோன்யா சோமர்வில்லே ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றது.

ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், இங்கிலாந்து வீரர் ராஜிவ் அவுசப்பை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை 21-14, 18-21, 21-17 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு மகளிர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லீயை எதிர்கொண்டார். இதில் 21-18, 21-8 என்ற செட்கணக்கில் பி.வி.சிந்து வெற்று பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சாய்னா நேவாலுடன் பலப்பரீட்சை செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து