முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா - சீனா இடையிலான உறவை வலுப்படுத்த கிம் ஜோங் உன் அழைப்பு

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங், வடகொரியா மற்றும் சீனா நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இருதரப்பிலும், அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:

சென்ற மார்ச் 27-ஆம் தேதி சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். கடந்த 2011-ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றதற்குப் பிறகு, கிம் ஜோங்-உன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கு கிம் ஜோங் -உன் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் மற்றும் வடகொரிய அதிபர் ஆகியோரிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே சீன அதிபரை கிம் ஜோங்-உன் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சாங் டோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வடகொரிய தலைநகரில் அதிபர் கிம் ஜோங் உன்னை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, சீன தலைவர்களுக்கு கிம் ஜோங்-உன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் கிம் ஜோங் உன்னுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கச் சொன்னதாக சீன குழு அவரிடம் தெரிவித்தது.

இதையடுத்து, வடகொரியா மற்றும் சீனா ஆகியவற்றுக்கிடையிலான மனக் கசப்புகளை மறந்து பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பிலான உறவுகளையும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கிம் ஜோங் -உன் அழைப்பு விடுத்தார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிம் ஜோங்-உன்னை வரும் மே மாதம் சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளதாக தென் கொரியா கூறியது. இருப்பினும், இரு தலைவர்களும் சந்திக்கும் இடம் மற்றும் காலம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமெரிக்க அதிபர் மாளிகை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

கடந்த 1950-ஆம் ஆண்டு முதல், 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே சுமுகமான சூழல் இல்லாததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைக ளும், அணு குண்டு சோதனைகளும் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது போர்ப் பதற்ற விவகாரத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், தென் கொரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்ககேற்க வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் முதல் முறையாக தென் கொரியாவுக்கு சென்றார்.

நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தனது சகோதரி மூலம் தென் கொரிய அதிபருக்கு கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், சீனாவிடமும் கிம் ஜோங் -உன் நல்லெண்ண நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து