முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு: ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி இன்று 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூரை வீழ்த்தி ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறுமா? என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஒரு தோல்வியுடன்...
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 6-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 1 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை 5 விக்கெட்டிலும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 4 ரன்னில் தோற்றது. 4-வது மற்றும் 5-வது ஆட்டங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்சை 64 ரன்னிலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன்னிலும் வீழ்த்தியது.

‘ஹாட்ரிக்‘ வெற்றி...
இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் அம்பதி ராயூடு (201 ரன்), வாட்சன் (184 ரன்), கேப்டன் டோனி (139 ரன்), ரெய்னா (118 ரன்) நல்ல நிலையில் உள்ளனர். இதே போல பிராவோ, சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்களும் அதிரடியை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

ஹர்பஜன்சிங் இடம்...
பந்துவீச்சில் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், பிராவோ ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி கொடுத்த கரண்சர்மா நீக்கப்பட்டு ஹர்பஜன்சிங் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப், டெல்லியை வென்று இருந்தது. கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகளிடம் தோற்றது.

கோலி - டி வில்லியர்ஸ்...
தற்போது சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. டிவில்லியர்ஸ் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். டெல்லி அணிக்கு எதிராக அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 212 ரன்கள் எடுத்துள்ளார். இதே போல கேப்டன் விராட் கோலியும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் 231 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். இதுதவிர டி காக், ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். பந்துவீச்சில் யசுவேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 21-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 20 போட்டியில் சென்னை 12-ல் பெங்களூர் 7-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து