முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே இரு கிராம மோதலாக வெடித்த குடி நீர் பிரச்சனை - டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 1 மே 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே குடி நீர் பிரச்சனை இரண்டு கிராமங்களில் கோஷ்டி மோதலாக வெடித்ததால் டி.ஐ.ஜி., மாவட்ட எஸ்.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி கிராமத்திற்கு இதே ஊராட்சியில் உள்ள ராமநாதபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடி நீர் கொண்டு செல்லப்படுகிறது. எஸ்.பாறைப்பட்டிக்கு செல்லும் தண்ணீரை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் இடையிலேயே பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.பாறைப்பட்டி கிராம மக்கள் அங்கு சென்று கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 2 கோஷ்டியினரும் கட்டை, கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபால், கருப்பையா, எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்த மாயி ஆகியோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த மோதலையடுத்து செம்பட்டி _ பழனி ரோட்டில் எஸ்.பாறைப்பட்டி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராமநாதபுரத்திலும் மறியல் போராட்டம் நடந்தது. ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. சந்திரன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக செய்தனர். இருந்த போதும் 2 கிராம மக்களும்  மீண்டும் மோதலில் ஈடுபட சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் கேட்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோசி நிர்மல்குமார், எஸ்.பி.சக்திவேல்  தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரு தரப்பினரும் தனித்தனியாக செம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரச்சனைக்கு காரணமான பாறைப்பட்டி ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) தமிழ்செல்வம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இருதரப்பினரும் எஸ்.பி.யிடம் தெரிவித்தனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து