முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் நகராட்சி சுகாதார பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,  ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு பொது கழிப்பிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள கழிப்பிடங்கள் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு  குறித்து கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு திடீர்  ஆய்வு மேற்கொண்டார். 
 மத்திய அரசு, இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களைக் கண்டறிந்து அவற்றில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அனைத்து நிலையிலும் தன்னிறைவு பெற்ற மாவட்டங்களாக ஏற்படுத்திடும் வகையில் 115 மாவட்டங்களை தேர்வு செய்துள்ளது.  அவற்றில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதன்படி சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற மேம்பாடு, வேளாண்மை மற்றும் நீர்நிலை மேம்பாடு, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரித்திட ஏதுவாக தொழில்திறன் பயிற்சி வழங்குதல் என்பதை அடிப்படையாக கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நூறு சதவீதம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற முழு சுகாதார மாவட்டமாக அறிவித்திடும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில்  கலெக்டர் முனைவர் நடராஜன் ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பொது கழிப்பிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள கழிப்பிடங்கள் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு  குறித்து நேரில் சென்று பார்வையிட்டு திடீர்  ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பொது கழிப்பிடம் மற்றும் நம்ம டாய்லெட் கட்டண கழிப்பிடம் ஆகியவற்றின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.  தொடர்ந்து மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள பொது கட்டண கழிப்பிடத்திலும், அதன் பிறகு ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியின் கழிப்பறைகள் மற்றும் இப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கழிப்பறை ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தார்.
 மேலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து நிலை அரசு பள்ளிகளிலும் நூறு சதவீதம் குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் கழிப்பறைக்கான தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை நகராட்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.  இது தொடர்பாக விரிவான அறிக்கையினை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பித்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதேபோல நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் பொது கட்டண கழிப்பறைகள் ஆகியவற்றில் பொதுமக்களிடத்தில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்திட வேண்டும். அவ்வாறு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்த உரிமையினை பாரபட்சமின்றி ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் துரிதமாக செயல்படாமல் சுணக்கம் காட்டும் அலுவலர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் எச்சரித்துள்ளார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, உதவிப் பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, பிரிவு அலுவலர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து