முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலையை கண்மூடித்தனமாக உயர்த்துவது கொடூரத் தாக்குதல்: பா.மக. ராமதாஸ் கண்டனம்

திங்கட்கிழமை, 14 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : டீசல் விலையை உலகச் சந்தையுடன் இணைத்து கண்மூடித்தனமாக உயர்த்துவது ஊரக பொருளாதாரத்தின் மீதான கொடூரத் தாக்குதல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு முறையே 18 மற்றும் 23 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.61 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவதை மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 12-ம் தேதி முடிவடைந்த நிலையில், 14-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பெட்ரோல், டீசல் விலைகளை, மத்திய ஆட்சியாளர்கள் விருப்பம் போல மாற்றியமைப்பது மிகப்பெரிய துரோகம் ஆகும்.

எரிபொருட்களுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த ஆண்டு ஜூலை இன்று வரையிலான 10 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12.15 ரூபாயும், டீசல் விலை ரூ.13.66 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.1.36 வீதம் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. .

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இப்போதைய வரி விகிதங்கள் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.150 என்ற உச்சத்தை எட்டக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்துவிடும்.

எரிபொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து ஏழை - நடுத்தர மக்களை காப்பாற்ற வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து