முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அமைச்சரவை வரும் 6-ம் தேதி விரிவாக்கம்

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசின் அமைச்சரவை வரும் 6-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும், அவர்களுக்கு மாநில கவர்னர் வஜுபாய் வாலா ரகசியக் காப்புப் பிரமாணமும், பதவிப் பிரமாணமும் செய்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அமைச்சரவை பங்கீட்டில் காங்கிரசுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையே இரு வாரங்களாக நீடித்து இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, இது தொடர்பாக மாநில கவர்னரை முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வரும் சந்தித்துப் பேசினர். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அவர்கள் கவர்னரிடம் விவாதித்தனர். அதன் பின்னரே பதவியேற்பு விழா குறித்த தேதி இறுதிசெய்யப்பட்டது.

அமைச்சரவையில் காங்கிரசுக்கு 22 இடங்கள் என்றும் ம.ஜ.த.வுக்கு 12 இடங்கள் என்றும் முடிவு செய்யப்பட்ட போதிலும், இலாக்காக்களை ஒதுக்கீடு செய்வதில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.
இதையடுத்து, இரு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் டெல்லிக்குச் சென்று 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், இலாகா பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது. இதையடுத்து, வரும் 4 அல்லது 5-ம் தேதியில் அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொள்ள குமாரசாமி திட்டமிட்டார். ஆனால், அவ்விரு நாள்களும் கவர்னர் டெல்லி செல்லவிருப்பதால் பதவியேற்பு விழாவை 6-ம் தேதிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

உடன்பாட்டின்படி, காங்கிரசுக்கு உள்துறை, காவல், நீர்ப்பாசனம், பெங்களூரு மாநகர வளர்ச்சி, தொழில் மற்றும் சர்க்கரை ஆலைகள் மேம்பாடு, சுகாதாரம், வருவாய், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, வீட்டு வசதி, சுகாதாரம், சமூகநலத் துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன், சுரங்கம் மற்றும் நில அமைப்பியல், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன், உணவு மற்றும் பொதுவழங்கல், ஹஜ், வக்பு மற்றும் சிறுபான்மையினர் நலம், சட்டத் துறை, அறிவியல் - தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, கன்னட வளர்ச்சித் துறை மற்றும் கலாசாரம், துறைமுகம் - உள்நாட்டு போக்குவரத்து மேம்பாடு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிதி, கலால், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு, உளவு, திட்டமிடல் மற்றும் புள்ளியியல், பொதுப்பணி, மின்சாரம், கூட்டுறவு, சுற்றுலா, கல்வி, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம், தோட்டக்கலை மற்றும் பட்டு வளர்ச்சி, சிறுதொழில், போக்குவரத்து, சிறு பாசனத் திட்டங்கள் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள இலாக்காக்களை துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரும், முதல்வர் குமாரசாமியும் ஆலோசித்து ஒதுக்க உள்ளனர்.

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. கர்நாடகத்தில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ளதன் தொடர்ச்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தத் தகவலை கர்நாடகத்துக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் வேணுகோபால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து