முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 11 பேர் தூக்கிட்டு தற்கொலை: சி.சி.டி.வி.காட்சிகளில் திடுக்கிடும் தகவல்கள்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டதில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. இவர்கள் சாவில், வெளிநபர்கள் யாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, யாரும் கொலை செய்யப்படவில்லை என்கிற விஷயமும் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.

டெல்லியின் வடக்குப் பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு இறந்திருந்தனர்.

வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி (வயது 77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா (வயது 57). பவனேஷ் மனைவி சவிதா (வயது 48), சவிதாவின் மகள் மீனு (வயது 23), நிதி (25), துருவ் (15), லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33).

இதில் உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில், யாரும் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால், உறவினர்களோ இது தற்கொலை அல்ல, யாரோ சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு உறவினர்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் அல்ல என்று தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்கிறோம், உடல் நிலையில்லாதது, ஆன்மா தான் நிலையானது என்ற டைரிக்குறிப்புகள் தற்கொலை செய்துகொண்டவர்கள் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டுக்குப் பக்கவாட்டில் யு வடிவத்தில் 7 பிளாஸ்டிக் குழாய்களும், 4 நேரான குழாய்களும் ஒரே இடத்தில் ஏன் பொருத்தப்பட்டிருந்தன என்ற பல்வேறு கேள்விகள் போலீஸாருக்கு எழுந்தன.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்துக்கும் காடா பாபா என்ற மந்திரவாதி ஒருவருக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தது. போலீஸார் சந்தேகப்பட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இதற்கிடையே லலித் வீட்டின் முன் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர். அதில் பல்வேறுவிதமான காட்சிகளை போலீஸார் கண்டனர்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ''கண்காணிப்பு கேமரா காட்சிகளை நாங்கள் ஆய்வு செய்ததில் வெளிநபர்கள் யாரும் வீட்டுக்குள் இரவு 11.30 மணிவரை செல்லவில்லை. அப்படி இருக்கும் போது, இதில் இவர்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருடைய தூண்டுதலின் பெயரில் தற்கொலை செய்யவோ அல்லது கொலை செய்திருக்கவோ வாய்ப்பு இல்லை.

மேலும், தூக்குப்போடுவதற்காக அந்தக் குடும்பத்தில் உள்ள இரு பெண்கள் 5 நாற்காலிகளை எடுத்து வந்தது கேமராவில் தெரிகிறது. இந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் மீது ஏறித்தான் தூக்குப் போட்டுள்ளனர். தூக்குப்போட்ட இடத்தில் அந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் கிடந்தன.

ஆகவே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவை இந்தக் குடும்பத்தினர், முன்கூட்டியே திட்டமிட்டு, மன சம்மதத்துடன் செய்துள்ளனர்.

மேலும், இந்த குடும்பத்தைச் சேர்ந்த லலித் பாட்டியா என்பவர் இறந்துபோன தனது தந்தையுடன் பேசுவது போன்று கற்பனை செய்துகொண்டு அவ்வப்போது பேசியுள்ளார். அவர் கூறியதாக பல்வேறு குறிப்புகளை டைரியில் எழுதியுள்ளார். லலித் பாட்டியாவின் கட்டளைப்படியே, கடவுளை அடையவேண்டும் என்ற விருப்பப்படியே குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது டைரியில் உள்ள குறிப்பின் மூலம் அறியமுடிகிறது. ஜூன் 30-ம் தேதி கடவுளைப் பார்க்க செல்கிறோம் என்று எழுதப்பட்டு இருந்தது.

இவர்கள் அனைவரும் இறக்கும் முன், ஒரு ஹோட்டலில் இருந்து 20 ரொட்டிகளை வரவழைத்துள்ளனர். இந்தக் குடும்பத்தினருக்கு ரொட்டி சப்ளை செய்த இளைஞரிடமும் விசாரணை நடத்தினோம். அந்த இளைஞர், தான் ரொட்டி சப்ளை செய்யும் போது மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொண்டு தனக்கு பணத்தை அளித்தனர் என்று தெரிவித்தார்.

கண்காணிப்பு கேமராவில் இரவு 10 மணிக்கு அந்தக் குடும்பத்தில் உள்ள 2 பெண்கள் மாடியில் பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துச் சென்றனர். 10.15 மணிக்கு அந்த வீட்டில் இருந்த துருவ், சிவம் ஆகிய இரு சிறுவர்களும் கையில் வயர் அல்லது நைலான் கயிறு போன்ற பொருட்களைக் கையில் எடுத்துச்சென்றனர்.

10.29 மணிக்கு ஹோட்டல் ஊழியர் ஒருவர் ரொட்டி சப்ளை செய்ய வந்தார். அவரிடம் ரொட்டியை பெற்றுக்கொண்டு பணத்தைக் கொடுத்தனர்.

10.57 மணிக்கு அந்த வீட்டில் இருந்த புவனேஷ் என்பவர் கையில் நாயைப் பிடித்துக்கொண்டு வெளியே வாக்கிங் சென்றார். 11.04 மணிக்கு மீண்டும் நாயை அழைத்து வந்து மாடியில் கொண்டுபோய் நாயைக் கட்டுகிறார்கள்.

அதன்பின் அதாவது 11.10 மணிக்குப் பின் இவர்கள் ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இந்த தற்கொலை இவர்கள் குடும்பத்தினர் விருப்பப்படியேதான் நடந்துள்ளது, வெளியாட்கள் இதில் ஈடுபடவில்லை என்பது சி.சி.டி.வி. கேமரா மூலம் தெரியவருகிறது எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து