பிரபல ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு ஸ்டோலன் இணைந்து ஆடிய ஹூலா நடனம் நட்புக்கு இலக்கணம் என ரசிகர்கள் மகிழ்ச்சி

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      உலகம்
Arnold 2018 07 07 0

கலிபோர்னியா: ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு ஸ்வாஸ்னெகர் மற்றும் சில்வெர்ஸ்டார் ஸ்டோலனுடன் சேர்ந்து ஹுலா நடனம் ஆடும் காட்சிகள் வைரலாக பரவிவருகிறது.

உலக அளவில் பாடி பில்டிங்கில் கவனம் செலுத்துபவர்கள் எல்லோருக்கும் மானசீககுருவாக திகழ்பவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்னெகர். சிறந்த பாடி பில்டர். தனது 15 வயதில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து 20-வது வயதில் உலக ஆண் அழகன் பட்டம் வென்று அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அதன்பிறகு ஹாலிவுட் சினிமா அவரை செல்லப்பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டது.

கமாண்டோ, கொனான் தி பார்பேரியன், ட்ரூ லைஸ், டெர்மினேட்டர் சீரீஸ், ப்ரிடேட்டர் என அர்னால்டின் சாகசங்களை சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது 70-வது வயதில் வீர நடைபோடும் அர்னால்ட், இப்போதும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை தவறாது கடைபிடித்து வருகிறார். ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தபோது நட்சத்திர விடுதியில் உடற்பயிற்சி செய்துவிட்டு நம்ம ஊர் தோசையை விரும்பி சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

ராக்கி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டோலன். எக்ஸ்பாண்டபில்ஸ், எஸ்கேப் ப்ளான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.  தற்போது ராம்போ-5-ல் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்டோலன் தன்னுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதில் கலந்து கொண்ட நடிகர் அர்னால்ட், விழாவை சிறப்பிக்கும் விதமாக சக ஹாலிவுட் நடிகரான சில்வெர்ஸ்டார் ஸ்டோலனுடன் இணைந்து ஹுலா நடனம் ஆடியுள்ளார்.

நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டோலனுடன் சேர்ந்து வாயில் சிகாரை வைத்தபடியே இருவரும் ஹுலா நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அர்னால்டு, ராக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, நீங்க அற்புதமான நண்பர், மிகச்சிறந்த ஹூலா டான்சர் ஆனால் என்னை விட மூத்தவர் என்பதை மறந்து விடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். ஹாலிவுட்டின் மனம் கவர்ந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களின் ஒற்றுமை மற்றும் கொண்டாட்டமான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நட்புக்கு இலக்கணம் இவர்கள் தான் என்று கூறி வைரலாக்கி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து