கர்நாடகாவில் கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      இந்தியா
kaveri 2018 01 16

பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக இரவு பகலாக‌ கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கேயுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 6-ம் தேதி தொடங்கிய கனமழை கடலோர மாவட்டங்களில் இரவு பகலாக தொடர்ந்து கொட்டித் தீர்த்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் அதிகளவில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு போக, விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் ஒகேனேக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடையும். தென்மேற்கு பருவ மழையால் கர்நாடக, தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து