முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் புதிய மருத்துவ தர வரிசை பட்டியலையும் வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நாடு முழுவதும் கடந்த மே மாதம்  6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். இந்த நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்கவும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சி.பி.எஸ்.இ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நாடு முழுவதும் தேசிய தமிழ் வினாத்தாளில் தவறு இருப்பதாக மனுதாரர் கூறுவது சரியல்ல. தேர்வு நடத்துவது, தேர்வு முடிவெடுப்பது மட்டுமே சி.பி.எஸ்.இ. வேலை. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சி.பி.எஸ்.இ.யால் உறுதி செய்ய முடியாது. தமிழில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்தை கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களை வைத்தே ஆங்கில வினாத்தாள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. பிராந்திய மொழியில் உள்ள அகராதியை அடிப்படையாக வைத்தே மொழி பெயர்ப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர் எனக் கூறப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக மாணவர்கள் பால் பாக்கெட், பேப்பர் போட்டு படிக்கின்றனர். இதுபோன்ற தவறு காரணமாக அவர்களின் மருத்துவ கனவு பாழாகிறது. வருங்கால சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டு செல்வது நமது கடமை. பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மனுதாரர் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு சி.பி.எஸ்.இ. என்ன பதில் சொல்லப்போகிறது.

தமிழில் மொழி பெயர்ப்பில் அதிக பிழைகள் உள்ளன. இந்த வினாத்தாள் எப்படி ஏற்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தாக்கல் செய்த மறுநாள் தேர்வு முடிவு வெளியிட்டது ஏன்? இது தவறான முன்னுதாரணமாகும். நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது என்று நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. அப்போது, நீதிபதிகள், ஆங்கிலத்திலிருந்து தமிழில் கேள்விகள் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளன. இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு தவறாக இருந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பெண்கள் 2 வாரத்திற்குள் வழங்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து