முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் வேகமாக நிரம்பும் அணைகள்: ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கனமழை
கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

கபினி அணை...
கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.09 அடியாக உள்ளது. அதன் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி ஆகும். தற்போதைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 47,547 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 47,375 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அணையில் இருந்து 50,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்பொழுது நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர்...
இதே போல் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 37,783 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கே.ஆர்.எஸ். நீர் மட்டம் 117.70 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து கர்நாடக பாசனத்திற்கு வினாடிக்கு 2,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு...
கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வளத்துறையும், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐவர்பாணி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ள நீர் அதிகமாக கொட்டுகிறது.

75 கிலோ மீட்டர்...
ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மீன்பிடிக்க வேண்டாம்...
இதுகுறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் கூறியதாவது:-
ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர் கண்காணித்து வருகிறார்கள். வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்க வேண்டாம். பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நேற்று 4-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து