முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் காவலரை படுகொலை செய்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட காவலர் சடலமாக நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-
சலீம் ஷா என்ற காவலரை, குல்காம் மாவட்டத்தின் முதல்ஹாமா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இந்நிலையில், அருகில் உள்ள ரிவாண்டி பயீன் கிராமத்தில், அவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதால், அவரைக் கடத்திச் சென்றவர்கள் கடுமையாகத் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சலீம் ஷா, புல்வாமாவில் பணியாற்றி வந்தார். அவருக்கு வயதான தாய், தந்தையரும், 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொலையாளிகளைப் பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

இந்நிலையில், காவலர் சலீம் ஷா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் நேற்று காலை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து