முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு : பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் - ஜனாதிபதி ஒப்புதலுக்குப்பின் சட்டம் அமலாகும்

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கும் கிரிமினல் திருத்தச் சட்டம் பாராளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்குப்பின் சட்டம் அமலாகும்.

கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பிறகு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது.  இதனை அடுத்து, பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த அவசர சட்டம் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு பதிலாக நிரந்தர சட்டம் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்த நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை அமைச்சர் கிரண் ரெஜிஜூ தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடுமையான தண்டனை...

16 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவமும், 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவமும் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் மனசாட்சியை உலுக்கி விட்டது. இதையடுத்து, 16 வயதுக்குட்பட்ட மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் தேவைப்பட்டது. நாட்டில் சிறுமிகளுக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் வன்முறைகளும், காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களும் இந்தச் சட்டத்தின் தேவையை அதிகரித்துள்ளன. இதுபோன்ற கொடிய குற்றங்களில் ஈட்டுபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டமும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தில் மக்களிடத்தில் வலுத்தது.

மசோதா தாக்கல்...

இதன்படி 12, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம், கூட்டு பலாத்காரம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கலாம். பெண்களைப் பலாத்காரம் செய்தால் விதிக்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறை தண்டனையாகவும் விதிக்கப்படும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது, குற்றத்தின் அடிப்படையில் வாழ்நாள் சிறையாகவும் மாற்றப்படும். இதன்படி குற்றவாளி சாகும் வரை சிறையில் இருக்க நேரிடும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கலாம்.

முன்ஜாமின் இல்லை...

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிக்குக் குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனை விதிக்கலாம். 12 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்தால், குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கலாம். இந்த மசோதாவில் சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து, நீதிமன்றத்தால், தண்டனை அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதே போல மேல்முறையீட்டுக்கு வழக்கு சென்றால், அதிகபட்சமாக 6 மாதங்களில் வழக்குகள் நடத்தி முடிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் அல்லது கூட்டுப்பலாத்காரம் செய்ததாக எழும் குற்றச்சாட்டின் கீழ் எவருக்கும் முன்ஜாமின் வழங்கப்படாது. இவ்வாறு கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் இந்த நிரந்தர சட்டம் அமலாகும்.

 



இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து