விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      தமிழகம்
Vijaya ship 14-09-2018

சென்னை,ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் விஜயா நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கடலோரக் காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில் பழைய கப்பல்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்டு அதிநவீன புதிய ரோந்துக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு தொடர்ந்து பணியில் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ரோந்துக் கப்பலான விஜயா நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோந்து கப்பல் விஜயாவை முறைப்படி படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை தலைமை இயக்குநர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ரோந்து கப்பலான விஜயா, 2,100 மெட்ரிக் டன் எடையும், 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இந்த கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் கரைக்குத் திரும்பாமல் சுமார் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கண்காணிப்பு கருவிகள் அதிநவீன ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பல்களின் பெரும்பான்மையான பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து