முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி:சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்தியா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிசெய்தது

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய்,ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஷிகர் தவான், ரோகித் சர்மா சதம் அடித்தனர். இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது.

மீண்டும் மோதல்....14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல், உஸ்மான் கான் ஆகியோருக்கு பதிலாக முகமது அமிர், ஷதப்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

பாக். பேட்டிங் தேர்வு.....‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதலை நேர்த்தியாக தொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்து ஆட சிரமப்பட்டனர்.

ரோகித் சர்மா அப்பீல்........8-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச அழைக்கப்பட்டார். அதற்கு உடனடியாக நல்ல பலன் கிடைத்தது. அவரது அந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல்-ஹக் (10 ரன், 20 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் நடுவர் எல்.பி.டபிள்யூ. கொடுக்க மறுத்ததால் நடுவரின் முடிவை எதிர்த்து கேப்டன் ரோகித் சர்மா அப்பீல் செய்தார். இதில் இந்திய அணியின் அப்பீல் வெற்றியில் முடிந்தது. இமாம் உல்-ஹக் அவுட் என்று அறிவிக்கப்பட்டு வெளியேறினார்.

குல்தீப் யாதவ்............அடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். 13-வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பஹார் ஜமான் முதல் சிக்சரை பறக்கவிட்டு அசத்தினார். ஆனால் குல்தீப் யாதவின் அடுத்த ஓவரில் பஹார் ஜமான் (31 ரன்கள், 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முன்னால் இறங்கி தரையில் முட்டி போட்ட நிலையில் பந்தை அடிக்க முற்பட்டு நிலை தடுமாறி விழுந்ததுடன் எ.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டையும் இழந்து நடையை கட்டினார்.

பாக். தடுமாற்றம்.....இதைத்தொடர்ந்து கேப்டன் சர்ப்ராஸ் அகமது, பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு ரன் எடுப்பதற்கு ஓட முயற்சித்த சர்ப்ராஸ் அகமது, திடீரென எதிர்முனையில் இருந்த பாபர் அசாமை திரும்பி விடும்படி சைகை செய்தார். ஆனால் அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட யுஸ்வேந்திர சாஹல் துரிதமாக செயல்பட்டு பாபர் அசாமை (9 ரன்) ரன்-அவுட் செய்தார். அப்போது பாகிஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.

சோயிப் மாலிக்...இதனை அடுத்து சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமதுவுடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பாகிஸ்தான் அணி 27.1 ஓவர்களில் 100 ரன்னை எட்டியது. அடித்து ஆடிய சோயிப் மாலிக் 64 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை கடந்தார். இந்த போட்டி தொடரில் சோயிப் மாலிக் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 38.5 ஓவர்களில் 165 ரன்னாக உயர்ந்த போது சர்ப்ராஸ் அகமது (44 ரன்கள், 66 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் திரட்டியது.

237 ரன்கள்...அடுத்து ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். 42-வது ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ஆசிப் அலி 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை புவனேஷ்வர்குமார் விட்டுக்கொடுத்தார். 43.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது. நிலைத்து நின்று ஆடிய சோயிப் மாலிக் 90 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய ஆசிப் அலி (30 ரன்கள், 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சிலும், ஷதப் கான் (10 ரன்) ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சிலும் அடுத்தடுத்து கிளன் போல்டு ஆகி ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. முகமது நவாஸ் 15 ரன்னுடனும், ஹசன் அலி 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

238 ரன்கள் இலக்கு...பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 15-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார். இந்த போட்டி தொடரில் அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும் (119 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன்), அம்பத்தி ராயுடு 12 ரன்னுடனும் (18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) களத்தில் இருந்தனர். 19-வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களையும் கடந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 2 இந்திய வீரர்கள் சதம் அடிப்பது இது 3-வது நிகழ்வாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இறுதிப்போட்டிக்கு...சூப்பர்-4 சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்திய அணி தனது கடைசி ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து