முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற 'வியூகம்'

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

20 தொகுதிகள் ...தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகியோர் மரணம் காரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததால், மேலும் 18 தொகுதிகள் காலி இடங்களாக மாறியுள்ளன. இதையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியதுள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், அரசியல் சாசன சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

தேர்தல் பொறுப்பாளர்கள்...இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. இந்த 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய இலக்குடன் தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தனர். 20 தொகுதிகளுக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகிகள் என 120 பேர் தேர்தல் பொறுப்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று களப்பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் பங்கேற்பு....இடைத் தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் தலைமைக் கழகத்தில் நேற்று அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனீவாசன், கே.ஏ.செங்கோட்டைன் , செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் , துரைக்கண்ணு, தாமரை ராஜேந்திரன், சரோஜா, கே.சி.கருப்பணன், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் சி. பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, பி.வி. ரமணா, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பாடநூல் வாரியத் தலைவர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனை...கூட்டத்தில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விரிவாக ஆலோசனை வழங்கினர். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொகுதி பொறுப்பாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டு அறிந்தனர். பிரசாரத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பேச்சாளர்களை களம் இறக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

முதல்வர் வலியுறுத்தல்....ஆலோசனைக்கு பிறகு பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது “20 தொகுதிகளிலும் அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும்” என்று அவர் கூறினார். அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அனைத்திலும் நாம் வெற்றி பெற்று ஆக வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்பட்ட நிலையை நாம் மாற்றிக் காட்ட வேண்டும். கட்சி நமது பக்கம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவும் ஆட்சியை 5 ஆண்டுக்கு கொண்டு செல்லவும் இடைத்தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் ஜெயித்தே ஆக வேண்டும். அதற்கு உங்களுக்கு என்னென்ன உதவி வேண்டுமோ அதை தலைமை கழகத்தில் கேளுங்கள். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்குப் பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க. என்பது கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வியூகம் அமைப்பது என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தல் எப்போது வந்தாலும் அது பாராளுமன்றத்தேர்தலானாலும் இடைத்தேர்தலானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தயார் நிலையில் இருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். அ.தி.மு.க.வில் விருப்பமனு குறித்து தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு கூடி முடிவெடுக்கும். தேர்தலை எதிர்நோக்கி வெறியோடு நாங்கள் காத்திருக்கிறோம்.

அவசியமில்லை...எல்லோரும் ஒருமித்த கருத்தோடு 20 தொகுதி்களிலும் வெற்றி பெறுவது தான் எங்கள் நோக்கம் அதற்காக என்ன வியூகம் எடுக்க போகிறோம் என்பது வெளியே சொல்ல வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க. என்பது ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம். அதில் ஓரிரு சதவீதம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அந்த குடும்பத்தை தவிர மற்றவர்கள் பகையாளிகளும் அல்ல. பங்காளிகளும் அல்ல. அவர்கள் எல்லோரும் எங்கள் சகோதரர்கள். அவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம். இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து