மதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்

சனிக்கிழமை, 1 டிசம்பர் 2018      ஆன்மிகம்
mikam

Source: provided

மதுரை மாவட்டத்தில் உள்ள திடியன் மலையின் உச்சியில் உள்ள குகையில் பல நூற்றாண்டுகளாக மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவிலான பக்தர்கள் பெளர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து மலை உச்சியில் உள்ள கைலாசநாதரை தரிசிக்க வருபவர்களின் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் சிந்துபட்டிக்கு  அருகே உள்ள திடியன் மலையில் புகழ் பெற்ற கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட அருள்மிகு தட்சிணாமூர்த்தி 14 சித்தர்களுடன், நந்தி மீது அமர்ந்த கோலத்தில், சுமார் மூன்றடி உயரத்தில் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார்.

ராவணன் உடனான யுத்தத்துக்குப் பின்பு ஸ்ரீராமபிரான் ஆட்சிப் பொறுப் பேற்றதும் முதல் வேலையாக அசுவமேதயாகம் செய்தார். அந்த யாக குதிரை செல்லும் வழியில் எங்கெல்லாம் ஓய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒரு காசிலிங்கத்தை வைத்து ராமபிரான் பிரதிஷ்டை செய்துள்ளார். அவ்வாறாக இந்த திடியன்மலை அடிவாரத்தில் உள்ள பொற்றாமரைக் குளக்கரையில் யாக குதிரை ஓய்வெடுக்க அங்கே ஒரு காசிலிங்கம் ராமபிராானால் பிரதிஷ்டை செயப்பட்டது. நாளடைவில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் இங்கே ஒரு கோயிலை எழுப்பி வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.

இப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக இறப்பின்றி வாழ்ந்து வரும் சித்தர்கள் ஏராளமானோர் அவர்களது வயது முதிர்வு காரணமாக கட்டை விரல் அளவுக்குக் குறுகி விட்டதாக கூறப்படுகிறது. மரணத்தை வென்று என்றும் 16 மார்க்கண்டேயர்கள் போல் காணப்படும் இவர்கள் கட்டை விரல்  சித்தர்கள் என்றும் இவர்களுக்கு உதவி வரும் குள்ள மனிதர்கள் கட்டையர்கள் என்றும்  அழைக்கப்படுகின்றனர். இவர்கள் திடியன் மலைப் பகுதிகளில் அதிகளவில் இருந்துள்ளனர். திடியன் மலையின் மேல்புறம் மையப்பகுதியில் மிகக் குறுகிய குகை ஒன்று உள்ளது. இங்கு தினமும் கட்டை விரல் சித்தர்கள் வந்து போவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

திருவண்ணாமலை, சதுரகிரி,கொல்லிமலை, சித்தர்வாழ் மலை போன்ற தலங்களில் சத்குரு மூலமாக மட்டுமே காணவல்ல அரிய ஜோதி விருட்சங்கள் உள்ளன. இந்த ஜோதி பிரகாசத்தைக் கொண்டுதான் விண்ணில் இருந்து வரும் தேவாதி தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் நம்முடைய பூமி மண்டலத்தை எளிதில் கண்டறிந்து வருகை தருகின்றனர். இவற்றுள் திண்டீர தைல ஜோதி வகையைச் சேர்ந்த நெக்கொட்டா மரம் இக்கோயில் தல விருட்சமாக உள்ளது. இந்த விருட்சத்தின் கீழ் மணல் பரப்பி, அதன் மீது வலது மோதிர விரலால், ‘தியான பூமி பீடம்’ என்று எழுத வேண்டும். பின்னர் கம்பளி, மெல்லிய பருத்தி துணி, மரப் பலகை இவற்றில் எவையேனும் ஒன்றின் மேல் பத்மாசனம், சுகாசனத்தில் அமர வேண்டும். முதலில் ஸ்ரீ கணபதியைச் சங்கல்பித்து வேண்டி, நெக்கொட்டா விருட்ச தேவமூர்த்திக்கு நன்றி செலுத்தி, தியானத்தைத் தொடங்க வேண்டும். இதனால், நமது வேண்டுதல்கள் நிறைவேறி, மனம் அமைதி பெறுவது நிச்சயம்.

மேலும் திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி, கைலாசநாதரை வணங்கி மலை உச்சியை வலம் வந்தால் நாளடைவில் அது குணமாகும். பௌர்ணமி நாட்களில் மலையை கிரிவலம் வந்து வணங்கினால் மரணத்தை வென்ற கட்டை விரல் சித்தர்களையும் அவர்களுக்கு உதவி செய்திடும் கட்டைய மனிதர்களையும் காணும் பாக்கியம் கிடைத்திடும் என்பது பக்தகோடி பெருமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து