முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களால் நான் - மக்களுக்காகவே நான் - தாரக மந்திரப்படி வாழ்ந்த ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இரும்பு பெண்மணி என்று உலக மக்களால் போற்றப்பட்டவர். தமிழ், ஆங்கிலம் உட்பட எட்டு மொழி பேசும் ஆற்றல் பெற்றவர். ஆரம்பத்தில் நடிப்பு அதன் பிறகு பாட்டு, பின்னர் அரசியல் என்று தான் கால்வைத்த அத்தனை துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி முத்திரை பதித்தவர். அவரை பற்றிய ஒரு கண்ணோட்டம் இங்கே பார்க்கலாம்....

பிறப்பு: 24 பிப்ரவரி 1948

பிறந்த இடம்: கர்நாடக மாநிலம்

ஆரம்ப வாழ்க்கை:

ஜெயலலிதா என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமளவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமரா ஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னோட்டமாக ஜெயா என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதர் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா - பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். இந்நிலையில் வெள்ளித் திரையில் அவரது தாயார் சந்தியாவுக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் அவர் சென்னைக்கு வந்தார்.

சென்னையிலுள்ள சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த ஜெயலலிதா, பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், விதி அவருக்கென்று வேறு திட்டங்களை வைத்திருந்தது. குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது.

திரைப்பட துறையில்...

ஷங்கர். வி.கிரி, இயக்கிய எபிஸில் என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1964-ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியை ஏற்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்தார். பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும், இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.

1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக் கொண்டார். ஜெயலலிதாவின் முதல் இந்திய படம் 1964-ல் வெளியான சின்னடா கொம்பே என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பார்வையாளர்களின் கைதட்டலை பெற்றுத் தந்தது. ஒரு வருடத்திற்குப் பின்னர் அவர்  வெண்ணிற ஆடை என்ற டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய படத்தின்  மூலமாக தமிழ்த் திரையுலகில் கால்பதித்து நடிப்பைத் துறையில் கொடிகட்டி பறக்க தொடங்கினார். அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவிலும் பிரவேசித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி பெரும் வெற்றியை பெற்றுத் தந்தது மற்றும் அவரது ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்தது. ஆயிரத்தில் ஒருவன், தனிப்பிறவி, முகராசி, அடிமைப்பெண், குடியிருந்த கோவில், மாட்டுக்கார வேலன், புதிய பூமி போன்ற படங்கள் எம்.ஜி.ஆருடன் இவர் நடித்து சக்கைப்போடு போட்ட படங்கள். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமையும் இவரை சாரும். திரையுலகின் பிற்பகுதியில் அவர் முன்னனி நடிகர்களான சிவாஜி கணேசன் ,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிவாஜியுடன் பட்டிக்காடா பட்டிணமா, சவாலே சமாளி, சுமதி என் சுந்தரி, எங்கிருந்தோ வந்தாள் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து கொடிகட்டி பறந்தார். 1968-ல், அவர் தர்மேந்திரா நடித்த இஜத் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அரசியலில் பிரவேசிக்கும் முன்னர் தனது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவாக அவரது கடைசி மோஷன் பிக்சர் படமான 1980-ல் வெளியான நதியை தேடி வந்த கடல் இருந்தது. ஜெயலலிதா ஒரு மிகச் சிறந்த நடிகை என்பதை எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி போன்ற படங்கள் மக்களுக்கு உணர்த்தின. அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல, ஒரு அற்புதமான பாடகியும் கூட. அடிமைப்பெண் படத்தில் அவரை பாட வைத்தவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்று அவர் பாடிய பாடலை இன்றைக்கு கேட்டாலும் நமக்கு மெய்சிலிர்க்கும். சூரியகாந்தி படத்தில் ஓ மேரி தில்ரூபா என்ற பாடலை டி.எம். சவுந்திரராஜனுடன் இணைந்து பாடி மக்களின் பாராட்டை பெற்றார். இப்படி திரைத்துறையில் பல அம்சங்களில் வெற்றிக் கொடி நாட்டியவர்தான் ஜெயலலிதா.

அ.தி.மு.க நிறுவனரான எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கிய பிறகு ஜெயலலிதாவை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையில் அவருக்கு பேரறிஞர் அண்ணா இருந்த இருக்கை ஒதுக்கப்பட்டது. அதன் காரணமாகவோ என்னவோ நாடாளுமன்றத்திலும் இவரது கம்பீர குரல் ஒலித்தது. இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்தில் செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அ.தி.மு.க. அரசியல் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டார். இதுவே, ஜெயலலிதாவை, அ.தி.மு.க கட்சியின் எதிர்கால வாரிசாக்கியது. எம்.ஜி.ஆர் முதல்வராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது. ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும் செயல்பட ஆரம்பித்தது.

பிறகு 1989-ல், அ.தி.மு.க. ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. அவர்  5 முறை மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர்  பொறுப்பை வகித்த பெருமையை பெற்றார். 

பங்களிப்புகள்:

அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக பணியாற்றினார். மாநில தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அவர் பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களைத் திறக்க முயன்றார். இதுவே, மாநில வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. அதே நேரத்தில், அவர் மாநிலத்தின் வறுமையை நீக்க மிகவும் கவனம் செலுத்தி அரும்பாடுபட்டார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பல நாடுகளின் முதலீடுகளை பெற்று தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தார்.

விருதுகள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல விருதுகளுக்கு சொந்தக்காரர். பட்டிக்காடா பட்டணமா என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது. சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஸ்ரீ கிருஷ்ணா சத்யா என்ற படம் அவருக்கு வழங்கியது. சூரியகாந்தி படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.

தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவியலுக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான கவுரவ டாக்டர் பட்டம் கிடைத்தது.

பாதிதாசன் பல்கலைக்கழகம், கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை வழங்கியது. சட்டத்திற்கான கவுரவ டாக்டர் பட்டத்தை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது. இந்த பட்டங்கள் மட்டுமின்றி வேறு சில  பட்டங்களும் இவருக்கு உண்டு. தங்கத்தாரகை, இரும்பு பெண்மணி, கலை செல்வி போன்ற பல பட்டங்கள் இருந்தாலும் இவரை அம்மா என்று அழைப்பதிலேயே அவரது தொண்டர்களும், மக்களும் ஆர்வம் காட்டினர்.

அ.தி.மு.க.வின் சாதனைகள்

1991-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.

1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது.

2001-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.

2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

2011-ம் ஆண்டு செப்டம்பர் -அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

2014 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அ.தி.மு.க., 37 தொகுதிகளில் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் நேரடியாகவும், 7 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அ.தி.மு.க.வின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டன. இவற்றில் 134 தொகுதிகளில் வென்று அ.தி.மு.க. ஆட்சியைத் தக்கவைத்தது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-ல் தான்.

மேலும் 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 50 ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை. அது மட்டுமின்றி 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வெற்றிவாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற ஒப்பற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திருக்கோவில் அன்னதான திட்டம் இது போன்ற திட்டங்கள் அவரது ஆரம்ப கால ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள். இத்திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. குறிப்பாக, தொட்டில் குழந்தை திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதற்காக ஜெயலலிதாவை அன்னை தெரசாவே மனதார பாராட்டினார். அதன் பிறகு யானைகள் நலவாழ்வு திட்டம், புதிய வீராணம் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தார். அதன் பிறகு ஏழை மக்களின் பசியை தீர்க்க அம்மா உணவகத்தை தமிழகம் முழுவதும் திறந்து வைத்தார். இந்த திட்டம் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்திற்கும் பயன் தரக்கூடிய ஒரு ஒப்பற்ற திட்டமாகும். இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றின என்று சொன்னால் அது மிகையாகாது. அதை தொடர்ந்து ரூ. 10-க்கு அம்மா குடிநீர் திட்டம், அம்மா உப்பு, அம்மா சிமிண்ட் என்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் ஜெயலலிதா. பஸ்சில் பயணம் செய்யும் மக்கள் இடையில் பஸ் நிற்கும் போது ரூ. 30 வரை கொடுத்து தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்தார்கள். ஆனால் இப்போது ரூ. 10-க்கு அம்மா குடிநீர் பாட்டில் கிடைக்கிறது. இதை இன்றளவும் மக்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் திருட்டி வி.சி.டியை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது, கந்து வட்டியை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது இப்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து புகழ் பெற்றவர்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

கடைசியாக அவர் செய்த மிகப் பெரிய நன்மை, ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் வரை இலவச மின்சாரம் கொடுத்ததுதான். இந்த திட்டத்தால் பல ஏழை குடும்பங்கள் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளன. 100 யூனிட்டை  தாண்டினால்தான் கட்டணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தி கொடுத்தவர் ஜெயலலிதா. பணிபுரியும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தவரும் அவரே. இப்படி ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு தந்த ஜெயலலிதா தீர்க்க முடியாத பல பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார். குறிப்பாக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது. பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது. இவையெல்லாம் அவரது சாதனைகளை உலகத்திற்கு இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அவர் அடிக்கடி சொல்வார். அந்த வார்த்தை அவருக்கு மட்டுமே பொருந்தும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து