முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பாரிக்கரின் உடல்நலம் குறித்த தகவல்களை வெளியிட இயலாது - ஐகோர்ட்டில் கோவா அரசு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 9 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பனாஜி : கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நலம் குறித்த தகவல்களை வெளியிட இயலாது என்று உயர்நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர், கடந்த ஓராண்டாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது பனாஜியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அரசு அலுவல்களைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், பாரிக்கரின் உடல்நலக் குறைவால் மாநில அரசின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதாகக் கூறி, அவரின் உடல்நலம் குறித்த விவரங்களையும், அதுதொடர்பான மருத்துவ அறிக்கையையும் வெளியிடுமாறு கோவா அரசுக்கு உத்தரவிடக்கோரி ராஞ்சோ டி' மெல்லோ என்ற சமூக ஆர்வலர், மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவைக்  விசாரித்த நீதிபதி ஆர்.எம்.போர்டே, மனுதாரரின் கோரிக்கைக்குப் பதிலளிக்குமாறு மாநில தலைமைச் செயலர் தர்மேந்திரா சர்மாவுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தர்மேந்திர சர்மா சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

பொதுநல மனுவின் அடிப்படை நோக்கமான "நல்லெண்ணம்' என்பது, இந்த மனுவில் காணப்படவில்லை. அரசின் செயல்பாடுகள் முடங்கியிருப்பதாக மனுதாரர் கூறுவது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. வதந்திகளின் அடிப்படையில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். கேபினட் அமைச்சர்களின் கூட்டத்தை முதல்வர் பாரிக்கர் அடிக்கடி நடத்தி வருகிறார். சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அவர் தொடர்ந்து சந்தித்து, ஆலோசனைகளைத் தெரிவித்து வருகிறார். மேலும், அலுவல் சார்ந்த முக்கிய முடிவுகளையும் அவர் எடுத்து வருகிறார்.

இந்த மனுவின் மூலம் மாநில முதல்வரின் அந்தரங்கத் தகவல்களை மனுதாரர் கோருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-இன் படி, மக்களின் அந்தரங்கத் தகவல்கள் அவர்களின் அடிப்படை உரிமைகளை சேர்ந்தவை. ஒருவர் மாநில முதல்வராக இருப்பதால், அவரின் அந்தரங்கத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, பாரிக்கரின் உடல்நலம் குறித்த அறிக்கையை வெளியிட இயலாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து