முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் நடந்த என்கவுன்டரில் பலியானவர் இந்திப்பட நடிகர்

வியாழக்கிழமை, 13 டிசம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப் பட்டவர்களில் ஒருவர், இந்திப் பட நடிகர் என்பது தெரிய வந்துள்ளது.

2 பேர் சிறுவர்கள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9-ம் தேதி பந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து அங்கு சென்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 18 மணி நேர சண்டைக்குப் பின் அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன.  அதில் இரண்டு பேர் சிறுவர்கள் என்பதை அறிந்து பாதுகாப்புப் படையினர் அதிரிச்சி அடைந்தனர். அதில் ஒரு சிறுவன், சாகிப் பிலால். ஒன்பதாம் வகுப்பு மாணவரான பிலால், ஹாஜின் பந்திபோரா பகுதியை சேர்ந்தவர். மற்றொருவர் அவரது நண்பர் முடாஸீர் ரஷித் பாரே. இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்திப்பட நடிகர்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிலால், ஏகே 47 துப்பாக்கி மற்றும் கத்தியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பிறகு அவர் லஷ்கர்-இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது. இவர்களோடு கொல்லப்பட்ட மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி. லஸ்கர் இ தொய்பா கமாண்டர், அலிபாய். பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பிலால், ஷாகித் கபூர், தபு, ஸ்ரத்தா கபூர் நடிப்பில் 2014-ல் வெளியான ’ஹைதர்’ என்ற இந்தி படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தவர்.

இதனால் சொந்த ஊரில் எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்துள்ளார். நாடகங்களில் நடித்து வந்த அவர், கால்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டவராகவும் இருந்துள்ளார். பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்த பிலால், தீவிரவாதியாக மாறியது எப்படி என்று தெரியவில்லை என்கின்றனர் அவர் குடும்பத்தினர். இவரது இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து