முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 34 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி

முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்களில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
சுற்றுப்பயணம்...
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது.
ஆஸி. பேட்டிங்...
இந்த நிலையில், நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் (6) புவனேஷ்குமார் பந்தில் கிளீன் போல்டு ஆனார். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், கணிசமாக ரன்களையும் சேர்க்கத்தவறவில்லை. அந்த அணியில் கேரி (24), உஸ்மான் கவாஜா (59), ஷான் மார்ஷ் (54), ஹேண்ட்ஸ்கோம்ப் (73) என பொறுப்பான முறையில் ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். மார்கஸ் ஸ்டாயின்ஸ் (47) மற்றும் மேக்ஸ்வெல் (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
289 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. இதில் ஒரு புறம் டோனி (51) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடினார். அவர் சதம் அடித்து அசத்தினார். ரோகித் 133 ரன்கள் (129 பந்துகள், 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.
ஆஸ்திரேலியா வெற்றி...
ஷிகர் தவான் (0), கோலி (3), ராயுடு (0), கார்த்திக் (12), ஜடேஜா (8), குல்தீப் யாதவ் (3) ரன்களில் ஆட்டமிழந்தனர். முகமது ஷமி (1) கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புவனேஷ்குமார் (29) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அகமது இன்னும் விளையாடவில்லை. இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.