முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிரதமராவதை விரும்பாத மம்தாவின் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமராவதை விரும்பாத மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடப்பு பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு (மக்களவைக்கு) தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் வரும் மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவிப்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்துக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க.வுக்கு எதிராக ஓரணியில் திரள இவர்கள் முயற்சித்து வருகிறார்கள். பாரதீய ஜனதாவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிரடியாக தொடங்கி விட்டது. இத்தேர்தல் மூலம் ராகுல் காந்தி பிரதமராவதை சில எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் தேர்தல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் தலா 39 தொகுதிகளில் போட்டியிட இவர்கள் முடிவு செய்து விட்டனர். எதிரும், புதிருமாக இருந்த இவர்கள் தற்போது திடீர் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அதே நேரம் காங்கிரஸ் கட்சியை இவர்கள் கைகழுவி விட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த நிலையில்தான் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 22 தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேசினார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்று பேசியிருக்கிறார். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா, ராகுல் ஆகியோர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் பேசிய இப்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசினார். இப்படி பேசிய அவர், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் அது பற்றி வாயே திறக்கவில்லை. இதில் இருந்து இவரது இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இந்த கூட்டத்தில் சோனியாவோ, காங்கிரஸ் தலைவர் ராகுலோ பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக மல்லிகார்ஜூன கார்கே, அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்து கொண்டார்கள். ராகுலை பிரதமராக்க விரும்பாத மம்தா நடத்திய கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்கள். இது ஏன் என்பதுதான் புரியவில்லை. மு.க. ஸ்டாலினும், ராகுல் பிரதமராவதை பற்றி வாயே திறக்கவில்லை. இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இவர் எதிர்பார்க்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகும்பட்சத்தில் மம்தா தலைமையிலான அணியில் ஒட்டிக் கொண்டு அரசியல் நடத்தி விடலாம் என்பதே ஸ்டாலின் கணக்காக இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதன் மூலமும் அவரது இரட்டை வேடத்தை(நாடகத்தை) புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

மேலும் கொல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுமே பிரதமர் மோடியை தாக்கிப் பேசுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இவர்களால் சொல்ல முடியவில்லை. கேட்டால் தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்கிறார்கள். ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு நிச்சயம் அடிதடி ஏற்படும். அந்த நிலை வந்தால் புதிதாக அமையும் மத்திய அரசு வெகு விரைவில் கவிழ்ந்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடத்தையும் இவர்கள் விமர்சிக்க தவறவில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து