பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி நிதி ஒதுக்கீடு: கடந்த ஆண்டை விட ரூ.1,700 கோடி அதிகம்

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      தமிழகம்
directorate of school education

சென்னை, தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 28 ஆயிரத்து 757 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

புதிய திட்டம்...

‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ மற்றும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம்’ ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள, முறையே 2,109.08 கோடி ரூபாய் மற்றும் 1,092.22 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. இருந்தபோதிலும், மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனைக் கருதி, இத்திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களான ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ மற்றும் ‘அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம்’ ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, 2019-2020 ஆம் ஆண்டு முதல் ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, அதைச் செயல்படுத்த 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,791.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.248 கோடி ஒதுக்கீடு...

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்வதற்கு வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை, இந்த அரசு முழுஉத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக, 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 248.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித் துறைக்காக 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.27ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ரூ.1,700 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து