முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 44 வது லீக் ஆட்டம்: மும்பையிடம் மீண்டும் சரணடைந்தது சென்னை

சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி யடைந்தது.

44 வது லீக் போட்டி...

ஐபில் தொடரின் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று முன்தினம் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், காய்ச்சல் காரணமாக தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரெய்னா, கேப்டன் பொறுப்பை ஏற்றார். தொடக்க ஆட்டக்காரர் டுபிளிசிஸ், ஆல் ரவுண்ட்ர் ஜடேஜா நீக்கப்பட்டு தமிழக வீரர் முரளி விஜய், சுழல் பந்துவீச்சாளர் சன்ட்னர், துருவ் ஷோரே சேர்க்கப்பட்டனர்.

ரோகித் அபாரம்...

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி காக் களமிறங் கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டி காக் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து எல்வின் லெவிஸ், ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தனர். லெவிஸ் 32 ரன்கள் எடுத்திருந்த போது சன்ட்னர் சுழலில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

67 ரன்கள்...

தொடர்ந்து களமிறங்கிய குணால் பாண்ட்யா  ஒரு ரன்னில் வெளியேற,  மற்றொரு புறம் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக தாஹிர் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 16 ஒவர்களின் முடிவில் 121 ரன்களை எட்டியது. எனினும் ரோகித் சர்மா 17வது ஓவரில் 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

தீபக் - தாஹிர்...

ஹர்திக் பாண்ட்யா 23 ரன்னுடனும் பொல்லார்ட் 13 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் சன்ட்னர் 2 விக்கெட்டும் தீபக் சாஹர், தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

156 ரன்கள் இலக்கு...

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், ஷேன் வாட்சனும் களமிறங்கினர். கடந்த போட்டியில் மிரட்டிய வாட்சன் இதிலும் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலிங்கா பந்தில் தொடர்ந்து இரண்டு பவுண்டரி விளாச்சிவிட்டு 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா 2 ரன், அம்பத்தி ராயுடு 0 ரன், கேதர் ஜாதவ் 6 ரன், துருவ் ஷோரே 5 ரன், தீபக் சாஹர் 0 ரன், ஹர்பஜன்சிங் 1 ரன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

மும்பை வெற்றி...

இதனால் 17.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு சென்னை அணி சுருண்டது. இரண்டு முறை அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய முரளி விஜய் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்து 38 ரன் எடுத்தார். சான்ட்னர் 22 ரன், பிராவோ 20 ரன்கள் எடுத்தனர்.  இதையடுத்து 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணியில், மலிங்கா 4 விக்கெட்டும் குணால் பாண்ட்யா, பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

2-வது தோல்வி...

12 போட்டியில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது 4 வது தோல்வி. இந்த தொடரில் மும்பை அணியுடன் இரண்டா வது தோல்வியை சந்தித்துள்ளது சிஎஸ்கே. மும்பை அணிக்கு இது 7வது வெற்றி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து