முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது: திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு

சனிக்கிழமை, 11 மே 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஸ்டாலினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ். முனியாண்டியும், சூலூரில் கந்தசாமியும், ஓட்டப்பிடாரத்தில் பெ. மோகனும், அரவக்குறிச்சியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கடந்த 3 வாரங்களாக சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் அவனியாபுரம், ஐராவதநல்லூர், சிந்தாமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். நேற்று அவர் தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை திருப்பரங்குன்றம் தொகுதியில் தொடங்கினார். இதற்காக அவர் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை மற்றும் வடபழஞ்சி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் பிரச்சாரம் செய்து பேசியதாவது,

இத்தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் முனியாண்டிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்காளர்களாகிய நீங்கள் வாக்களிக்க வேண்டும். நமது சின்னம் இரட்டை இலை சின்னம். இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாகும். மக்களால் கட்டிக் காக்கப்பட்டு அரியணையில் ஏற்றப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. அந்த இயக்கத்தை காப்பது மக்களாகிய உங்கள் கடமையாகும். நான் இங்கே தொண்டனாக பேசுகிறேன். தி.மு.க.வில் இருந்து ஒருவர் தலைவராக வருகிறார். நானோ தொண்டனாக வருகிறேன். நிச்சயம் மக்கள் பணியை நிறைவேற்றுவேன்.

எம்.ஜி.ஆர்.கண்ட கனவை மறைந்த முதல்வர் அம்மா, நனவாக்கி பல திட்டங்களை கொண்டு வந்தார். மக்கள் துன்பங்களை களையும் வகையில் பல்வேறு திட்டங்களை அவர் கொண்டு வந்தார். அந்த திட்டங்கள் எல்லாம் உங்கள் வீடு தேடி வந்தன. எம்.ஜி.ஆரும், அம்மாவும் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். ஆனால் வீட்டு மக்களுக்காக வாழ்ந்து ஆட்சி நடத்தியவர்தான் கருணாநிதி. தி.மு.க. என்பது ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி. இந்த தேர்தல் சகோதரர் ஏ.கே. போஸ் மறைவால் நடக்கின்ற இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் மக்களாகிய உங்கள் கோரிக்கை நிறைவேறும். எதிர்க்கட்சி வேட்பாளர் வென்றால் உங்கள் பிரச்சினை தீராது. இதுவரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் மக்கள் பிரச்சினைக்காக என்னிடம் மனு கொடுத்ததே இல்லை. எனவே பிரச்சினைகளை என்னிடம் எடுத்துக் கூற நமது வேட்பாளர் முனியாண்டிக்கு வாக்களியுங்கள். அவருக்கு வாக்களித்தால் உங்கள் பிரச்சினை குறித்து என்னிடம் மனு கொடுப்பார். நாங்கள் அவற்றை தீர்த்து வைப்போம். ஆனால் ஸ்டாலின் வந்து இங்கே வாக்குறுதி கொடுக்கிறார். அவரால் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். எதிர்க்கட்சிகளால் எப்படி உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார். மேலும் அவர் தனது பேச்சில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார். அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து