4 தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன: தலைவர்கள் - வேட்பாளர்கள் மின்னல் வேக தேர்தல் பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2019      தமிழகம்
by-election-cm 2019 05 12

மதுரை, 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ். முனியாண்டியும், சூலூரில் கந்தசாமியும், ஓட்டப்பிடாரத்தில் பெ. மோகனும், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிறகு 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் அவர் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தார். ஒரு சில இடங்களில் நடந்தே சென்று நெசவாளர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். நேற்று அவர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். இதே போல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நேற்று அரவக்குறிச்சி தொகுதிக்கு சென்று அங்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பல்வேறு இடங்களில் ஓ.பி.எஸ். பிரச்சாரம் செய்தார்.

இதே போல தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் 4 தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், திப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். இத்தொகுதியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியும் பொதுமக்களிடம் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

சூலூர் தொகுதியில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் நடந்தே சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். பிறகு ஒரு தேவாலயத்துக்கு சென்று சிறுபான்மை மக்களிடம் அமைச்சர்கள் வாக்கு சேகரித்தனர்.  திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். பிரபல தமிழ் நடிகை விந்தியாவும் இத்தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சை கேட்க மக்கள் திரளாக கூடினர்.

ஓட்டப்பிடாரத்தில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் பெ. மோகன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள் வாக்கு சேகரித்தனர். இப்படியாக இந்த 4 தொகுதிகளிலும் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்னல் வேக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தனது கட்சி வேட்பாளர்களுக்காக இந்த 4 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் மேலும் சூடு பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.  

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து