முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்துவிட்டு சந்திரசேகர ராவை சந்தித்தது ஏன்? மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
Image Unavailable

சூலூர்  : நாட்டின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து விட்டு சென்னையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தது ஏன்? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

உற்சாக வரவேற்பு...

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டு நேற்று சூலூர் சென்றார். அங்கு அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் பேசியதாவது,

நிறைவேற்ற முடியாது...

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். பொய்யான அறிவிப்புகளை வெளியிடுகிறார். இப்போது நடப்பது இடைத்தேர்தல். பொதுத் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு. ஆனால் இடைத்தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. எனவே மக்களை ஏமாற்ற இப்படி அறிவிப்புகளை வெளியிடுகிறார் ஸ்டாலின்.

மின்மிகை மாநிலமாக...

2011-ல் புரட்சித் தலைவி அம்மா தேர்தல் பிரச்சாரம் செய்த போது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தார். சொன்னபடி அவற்றை மக்களுக்கு கொடுத்தார் அம்மா. தி.மு.க. ஆட்சியின் போது மணிக்கணக்கில் மின்வெட்டு இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அந்த நிலைமையை சீர்படுத்தி தடையில்லா மின்சாரத்தை வழங்கினார் அம்மா. மேலும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக ஆக்கினார். இப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் அம்மா. ஆனால் கருணாநிதி 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார். சொன்னபடி கொடுத்தாரா? எனவே மக்கள் இந்த விஷயத்தில் ஏமாறக் கூடாது.

ரகசிய உடன்பாடு...

இன்னொருவர் இங்கு வந்து வாக்கு கேட்டு விட்டு போயிருக்கிறார். அவர்தான் டிடிவி தினகரன். கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டவர். இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தவர். கட்சிக்கும், ஆட்சிக்கும் பல நெருக்கடிகளை கொடுத்தவர். ஆனால் அவரால் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. அதனால் இப்போது தனியாக கட்சியை ஆரம்பித்து விட்டார். நமது வேட்பாளர் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்திருக்கிறார். அ.தி.மு.க.வால் அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன். ஆனால் இந்த இயக்கத்திற்கே துரோகம் செய்ய நினைக்கிறார். அவருக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

வெளியே எதிரி, உள்ளே உறவு

தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ஒன்றுதான். இவர்கள் வெளியில்தான் எதிரி. உள்ளே இவர்களுக்குள் உடன்பாடு இருக்கிறது. கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. மக்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த இயக்கம். ஆனால் தி.மு.க. குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அ.தி.மு.க.வில் ஒரு சாதாரண தொண்டனும் உயர்ந்த நிலைக்கு வரலாம். அதற்கு நானே ஒரு சாட்சி. தி.மு.க.வில் இது முடியுமா? அம்மா மறைந்த பிறகு முதல்வர் நாற்காலியில் அமர மு.க. ஸ்டாலின் துடித்தார். ஆனால் அது முறியடிக்கப்பட்டு விட்டது. மக்களுக்கு நன்மை செய்யாமல் எந்தவொரு இயக்கமும் வெற்றி பெற முடியாது. மக்கள் எங்கள் பக்கம். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம். ஒரு ஆங்கில இதழ் நடத்திய ஆய்வில் அது நிரூபிக்கப்பட்டு தமிழகத்திற்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சந்தித்தது ஏன்?

தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா சென்னையில் நடந்த போது அந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது யாரையும் கேட்காமல் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதை மறுத்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரபாபு நாயுடு. இப்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னையில் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறார். பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்த ஸ்டாலின், சந்திரசேகர ராவை சந்தித்தது ஏன் ? கேட்டால் 3-வது அணி அமைப்போம் என்கிறார்கள்.

நீங்கள் ஜெயித்தால்தானே, அமைக்க முடியும். 23-ம் தேதி முடிவு தெரிந்து விடும். அந்த தீர்ப்பு ஏற்கனவே மக்களால் எழுதப்பட்ட தீர்ப்பு. ஆகவே ஸ்டாலின் கனவு பலிக்காது. மக்களுக்காக எந்த திட்டத்தையும் தி.மு.க. கொண்டு வந்தது இல்லை. எனவே நமது வேட்பாளர் கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் வேட்பாளர் கந்தசாமி ஆகியோர் வேனில் உடனிருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து