டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக நரேந்திரமோடி ஏகமனதாக தேர்வு - ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார்

சனிக்கிழமை, 25 மே 2019      இந்தியா
amitshah meet president 2019 05 25

புது டெல்லி : டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதாவது நாட்டின் பிரதமராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற மோடி, அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமோக வெற்றி

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்...

முன்னதாக நேற்று பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பது குறித்தும் 17-வது மக்களவையை உருவாக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை சென்ற பிரதமர் மோடி அங்கு ஜனாதிபதியை சந்தித்து 16-வது மக்களவையை கலைக்கும் படி பரிந்துரை செய்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி நேற்று 16-வது மக்களவையை  கலைத்து உத்தரவிட்டார்.

எம்.பி.க்கள் கூட்டம்

இந்நிலையில் நேற்று  பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அப்போது அவருக்கு கரகோஷத்துடன் புதிய எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர். பிறகு தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற குழு தலைவர் பதவிக்கு மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோர் முன்மொழிந்தனர்.

ஏகமனதாக தேர்வு

இதை ஏற்று நரேந்திர மோடியை பாராளுமன்ற குழு தலைவராக தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அரங்கு நிறைந்த கரவொலி எழுந்தது. இதையடுத்து தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலில் அமித்ஷா மோடிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பூங்கொத்து கொடுத்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரது காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். அவரை தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரது காலிலும் விழுந்து மோடி ஆசி பெற்றார்.

பிறகு கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரிசையாக வந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்தி பேச்சு...

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடியை வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர், புதிய அரசுக்கு அ.தி.மு.க. எப்போதும் ஆதரவளிக்கும். என்றும் அரசுக்கு துணை நிற்கும் என்றும் பேசினார். தலைவர்களின் வாழ்த்துக்களை மோடி ஏற்றுக் கொண்டார். பிறகு பேசிய அவர், புதிய எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பா.ஜ.க.வின் வெற்றியை உலகத்தில் உள்ள இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில்உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற நரேந்திரமோடி அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து