முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் 17-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் இத்துறையின் இணையதளத்தில் www.tnvelaivaaippu.gov.in பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியாது இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியமையால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 2019-ம் ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் இன்று  (3-ம்தேதி) வழங்கப்பட உள்ளது. இதையடுத்து இன்று முதல் 17-ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில்  www.tnvelaivaaippu.gov.in  தங்கள் அளவிலேயே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.எனவே, மாணவர்கள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து இருப்பின் அந்த வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி பிளஸ் 2 கல்வித் தகுதியினை கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து