இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிக்கையை படித்து கட்சிக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் - அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      தமிழகம்
Minister-Jayakumar 2019 05 18

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிக்கையை படித்து கட்சிக் கட்டுப்பாட்டுடன் கப்சிப்பாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் ஜெயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

காலம் தான் முடிவு...

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒற்றைத் தலைமையா என்பதை அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் முடிவு செய்ய முடியாது. அதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க. என்பது மிகப் பெரிய ஆலமரம். அந்த மரத்தின் ஆணி வேர்களான கோடிக்கணக்கான தொண்டர்கள், கிளைக் கழகத் தொண்டர்கள்தான். அதை நிர்ணயிக்க வேண்டும். ஜெயலலிதா உயிரை கொடுத்து இந்த ஆட்சியை உருவாக்கியிருக்கிறார். ஆட்சியை கவிழ்க்க முடியுமா, கட்சியை உடைக்க முடியுமா என்று திமிங்கலங்களும் சுறா மீன்களும் வாயை பிளந்து கொண்டு தவியாய் தவிக்கிறார்கள். அதற்கு எந்த வகையிலும் நாம்இடம் கொடுத்து விடக் கூடாது.

எந்த பிளவும் இல்லை...

ஆட்சிக்கு இடையூறு செய்பவர்களுக்கு நாம் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் அறிக்கையை படித்து கட்சிக்கு கட்டுப்பட்டு கட்டுப்பாட்டுடன் கப்சிப்பாக இருக்க வேண்டும். அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை. இதில் மோதினால் மண்டை தான் உடையும் என்று ஏற்கனவே நாம் எச்சரித்திருந்தோம்.தேர்தலில் அ.ம.மு.க.வினர் மோதி மண்டை உடைப்பட்டு செல்லாக் காசாகி விட்டார்கள். ராஜன் செல்லப்பா மாவட்டசெயலாளர். அவர் கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து