முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.12.70 கோடி மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 70 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு 12.70 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் புதிய திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் வழங்கி துவக்கி வைத்தார்.

கூடுதல் வகுப்பறைகள்...

தமிழ்நாடு அரசு, தமிழகத்திலுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பள்ளிக்கட்டிடங்கள்....

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 53 கோடியே 84 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 21 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 27 கோடியே 84 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள், மொத்தம் 84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 52 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

'ஸ்மார்ட் கார்டு' திட்டம்...

2019-2020 ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களின் சுயவிபரங்களை பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  7 மாணவ, மாணவிகளுக்கு திறன் அட்டைகளை வழங்கி துவக்கி வைத்தார்.

அமைச்சர்கள் பங்கேற்பு...

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து