தமிழகத்தில் ஆறுகளை இணைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை தாருங்கள்: பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 26 ஜூன் 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டபணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு, அதனை முதன்மைபடுத்தவும், முன்னுரிமை அளித்து செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஆய்வு...

பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் கட்டிடத் துறையின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் மற்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, 2018-19 மற்றும் முந்தைய ஆண்டு துவங்கிய அணைக்கட்டுகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், செயற்கை முறையில் நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை கட்டுமானம் செய்தல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்து பணிகளை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அறிவுறுத்தல்...

குடிமாரமத்து திட்டத்தின் மூலம் 2017-18-ல் 29 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,511 பணிகளில் 1,311 பணிகள் முடிக்கப்பட்டதையும், எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். 2018-19-ல் 31 மாவட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1,829 பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள முதல்வர் கேட்டுக் கொண்டார். மேலும், தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பானை செய்பவர்களுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டைவிட சிறப்பாக செயல்படுத்திட துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

18 மாவட்டங்களில்...

உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளும் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் மூலம் 22 மாவட்டங்களில் உள்ள 1,325 ஏரிகள் மற்றும் 107 அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்டு, மேலும், நடப்பாண்டில் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்களில் 906 ஏரிகள் மற்றும் 183 அணைகட்டுகளின் புனரமைப்பு பணிக்கு மதிப்பீடு தயாரிக்கப்படுவதை துரிதப்படுத்தி விரைந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டார். கடலூர் - நாகப்பட்டினம் மாவட்டம், ஆதனுர் - குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் புதிய தலை மதகுகளுடன் கூடிய கதவணை ரூ. 428 கோடி செலவில் கட்டப்படும் பணி மற்றும் திருச்சி முக்கொம்பில் ரூ. 387 கோடி மதிப்பில் புதிய கதவணை கட்டும் பணியின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தார்.

முதல்வர் உத்தரவு...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீரை செரிவூட்டுவதற்கு ஆறுகள், ஓடைகளின் குறுக்கே மூன்று ஆண்டுகளில் 1,000 கோடியில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஒப்புதல் அளிக்கப்பட்ட 56 பணிகளில், 17 பணிகள் முடிக்கப்பட்டு தற்போது 39 பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்தார். அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணி ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் துவங்கி நடைபெறுவதை ஆய்வு செய்தார். சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் அமைக்கப்படும் புதிய நீர்தேக்கம் பணியில் இதுவரை 95 சதவீத பணி முடிந்துள்ளதையும், மீதமுள்ள பணிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

ஆறுகளை இணைக்கும்...

தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தில் பெண்ணையாறு (சாத்தனூர் அணை) - செய்யாறு இணைப்பு, பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) - பாலாறு இணைப்பு, காவேரி - (மேட்டூர் அணை) - சரபங்கா - திருமணிமுத்தாறு -அய்யாறு இணைப்பு,  காவேரி - அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகிவற்றின் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ஆறுகளை இணைக்கும் திட்டத்தை முதன்மை படுத்தவும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயலாக்கத்திற்கு எடுத்து வர கேட்டுக் கொண்டார். பணியின் முன்னேற்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அரசு செயலாளர் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டார்.

கட்டிடப் பணி...

பொதுப்பணித்துறையின் கட்டிடம் அமைப்பின் மூலம் 2018-19-ம் ஆண்டு பல்வேறு துறைகளுக்கு கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் ஆய்வு செய்தார். புராதன கட்டிடப்பணியான சென்னை சேப்பாக்கம், ஹீமாயுன் மஹால் கட்டிடத்தின் புனரமைப்பு பணி, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து